ஒமைக்ரான் பரவலால் ‘அல்வா’ கிண்டும் நிகழ்ச்சி ரத்து : டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

இந்தியா

ஒமைக்ரான் பரவலால் ‘அல்வா’ கிண்டும் நிகழ்ச்சி ரத்து : டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

ஒமைக்ரான் பரவலால் ‘அல்வா’ கிண்டும் நிகழ்ச்சி ரத்து : டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

மத்திய பட்ஜெட் வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி, பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன் துவங்கும். இந்த பணி துவங்குவதை குறிக்கும் வகையில் ‘அல்வா கிண்டும்’ நிகழ்ச்சி நடக்கும்.

இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர்கள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப்படுத்தப்படுகின்றனர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒரு பேப்பர் கூட இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தாக்கமாக உள்ளது. “யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்” என்கிற செயலி மூலம் பட்ஜெட் தொடர்பான 14 ஆவணங்கள் விநியோகிக்கப்படும் என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “இந்தியா பட்ஜெட்” என்கிற இணையதளம் மூலமும் இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பிப்ரவரி 1ஆம் தேதியன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் பட்ஜெட் ஆவணங்கள் இந்த வருடம் கிடைக்காது. அதேபோல பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பான செய்தி குறிப்புகளும் அச்சிடப்படாது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய, டிஜிட்டல் ஆவணம் மூலம் தனது உரையைப் படிக்க உள்ளார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு கிடையாது. பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை குறிக்கும் வகையில் நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave your comments here...