உலகின் மிகப் பெரிய முக்கிய நிறுவனங்களில் இந்தியாவின் இளம் தலைமை நிர்வாகிகள் இருப்பது பெருமையாக உள்ளது: பிரதமர் மோடி..!

இந்தியா

உலகின் மிகப் பெரிய முக்கிய நிறுவனங்களில் இந்தியாவின் இளம் தலைமை நிர்வாகிகள் இருப்பது பெருமையாக உள்ளது: பிரதமர் மோடி..!

உலகின் மிகப் பெரிய முக்கிய நிறுவனங்களில்  இந்தியாவின் இளம் தலைமை நிர்வாகிகள் இருப்பது பெருமையாக உள்ளது: பிரதமர் மோடி..!

பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிளாக்செயின் எனப்படும் இணைய வழி ஆவண பரிமாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2021, 2022 ஆம் ஆண்டுகளின் விருதாளர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விருதாளர்களுக்கு முதன்முறையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி, இணையமைச்சர் டாக்டர் முஞ்பரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார். கடந்த காலத்திலிருந்து வலிமையைப் பெற்று அமிர்த காலமான வரும் 25 ஆண்டுகளில் மகத்தான விளைவுகளை உருவாக்க அர்ப்பணிப்பதற்கான தருணம் இது என்று அவர் கூறினார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று நாட்டின் புதல்விகளையும் அவர் பாராட்டினார். விடுதலைப் போராட்டத்தின் புகழ் மிக்க வரலாற்றையும் பீர்பால கனக்லதா பருவா, குதிராம் போஸ், ராணி கைடிநீலு ஆகியோரின் பங்களிப்பையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். “இளம் வயதிலேயே இந்த வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டு அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது ஜம்மு-காஷ்மீரின் நவ்ஷேரா பகுதிக்குப் பயணம் செய்ததையும் சுதந்திரத்திற்குப் பிந்தைய போரின் போது சிறார் வீரர்களாக பங்களிப்பு செய்த பல்தேவ் சிங், பசந்த் சிங் ஆகியோரை சந்தித்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். தங்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் அந்த இளம் வயது ராணுவத்திற்கு அவர்கள் உதவி செய்தனர். இந்த நாயகர்களின் வீரத்திற்குப் பிரதமர் புகழாரம் சூட்டினார்.

குரு கோவிந்த் சிங் அவர்களின் புதல்வர்கள் கொண்டிருந்த வீரத்தையும், செய்த தியாகத்தையும் உதாரணங்களாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மிகுந்த துணிச்சலுடன் இந்தப் புதல்வர்கள் தியாகம் செய்தபோது அவர்களின் வயது மிகவும் இளையது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம், ஆன்மீகம், சமயத்திற்கு அவர்களின் தியாகம் ஒப்பில்லாதது. இந்தப் புதல்வர்கள் மற்றும் அவர்களின் தியாகம் குறித்து கூடுதலாக அறிந்து கொள்ளுமாறு இளைஞர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தில்லியில் இந்தியாவின் நுழைவாயில் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போசின் டிஜிட்டல் வடிவிலான உருவச்சிலை அமைக்கப்பட்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். “தேசத்திற்கான கடமை என்பதில் நேதாஜியிடமிருந்து மிகப் பெரும் ஊக்கத்தை நாம் பெற்றிருக்கிறோம். நேதாஜியிடமிருந்து இந்த ஊக்கத்தை எடுத்துக் கொண்டு நாட்டின் கடமைப் பாதையில் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்” என்று திரு.மோடி கூறினார்.

எந்தத் துறையும், கொள்கைகளும், முன்முயற்சிகளும் இளைஞர்களை மையப்படுத்தி உள்ளன என்று பிரதமர் கூறினார். தொடங்குக இந்தியா, நிமிர்ந்து நில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுடன் தற்சார்பு இந்தியாவின் மக்கள் இயக்கம் நவீன கட்டமைப்புகள் உருவாக்கம் போன்ற முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் புதிய சகாப்தத்தில் தலைமை தாங்குவதற்கு இந்திய இளைஞர்களின் வேகம் பொருத்தமாக உள்ளது. புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்கள் துறையில் இந்தியாவின் சக்தி அதிகரித்து வருவதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார்.

உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு இந்தியாவின் இளம் தலைமை நிர்வாகிகள் பொறுப்பேற்றிருக்கும் நாட்டின் பெருமிதத்தை அவர் எடுத்துரைத்தார். “இன்று புதிய தொழில்கள் உலகத்தில் இந்தியாவின் இளைஞர்கள் சிறந்து விளங்குவதைக் காணும் போது நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதால் நாம் பெருமிதம் கொள்கிறோம் என்று பிரதமர் கூறினார்.

நாட்டின் புதல்விகள் முற்காலத்தில் அனுமதிக்கப்படாத துறைகளிலும் கூட இன்று சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்று பிரதமர் கூறினார். புதிய கண்டுபிடிப்பிலிருந்து பின்வாங்காத புதிய இந்தியா இது. துணிவும், உறுதியும் இன்றைய இந்தியாவின் அடையாளங்களாகும்.

தடுப்பூசித் திட்டத்தில் இந்திய இளையோர்கள் தங்களின் நவீன, அறிவியல் ஆர்வத்தைக் காண்பித்திருப்பதற்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். ஜனவரி 3-லிருந்து வெறும் 20 நாட்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தில் இவர்களின் தலைமைத்துவத்திற்காகவும் அவர் பாராட்டினார். உள்ளூர் பொருட்களை ஆதரிக்கும் தூதர்களாக இருக்குமாறும், தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறும் அவர்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Leave your comments here...