பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி – சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை..!

இந்தியா

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி – சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை..!

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி –  சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை..!

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் ரூ.42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க இருந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டார்.

அவர் பெரோஸ்பூர் மாவட்டம், உசைனிவாலாவில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடாகி இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக பயண திட்டம் அதிரடியாக மாற்றப்பட்டது. அதன்படி அவர் சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் சென்றது.

ஆனால் வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் நிறுத்தப்பட்டது. வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலையில் மாற்றம் இல்லை. இதனால் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூடுபிடித்து வருகிறது.

பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட குழுவை பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி மெக்தாப் சிங் கில், உள்துறை மற்றும் நீதித்துறை முதன்மை செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். நடந்த சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி 3 நாளில் அறிக்கை அளிக்குமாறு விசாரணை குழுவுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட தீவிரமான பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மூத்த வக்கீல் மணிந்தர் சிங் நேற்று முறையிட்டார்.

இந்த விவகாரத்தின் மீது இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்துவதற்கு தலைமை நீதிபதி அமர்வு ஒப்புக்கொண்டது. இதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரிய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அமர்வு இன்று இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துகிறது.

Leave your comments here...