முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்

இந்தியா

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இன்று தமிழகத்தின் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெலிங்டன் பாதுகாப்பு சேவை பயிற்சி கல்லூரியில் பயிற்றுநர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அங்கு அவர் இன்று உரையாற்ற இருந்தார்.

இன்று மதியம் இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 வி-5 ஹெலிகாப்டரில் அதை இயக்கும் 4 படை வீரர்கள், 9 படைப்பிரிவை சேர்ந்த இதர வீரர்கள் ஆகியோருடன் பயணித்த முப்படை தலைமை தளபதி குன்னூர் அருகே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் துணைவியார் மதுலிகா ராவத்தும் உயிரிழந்தார். அவருடன் பயணித்த 11 படை வீரர்களும் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண்சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விமானப்படையில் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக ’செளரிய சக்ரா’ விருதை பெற்றவர்.

இந்த துயர சம்பவம் குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் மதுலிகா ராவத் அகால மரணம் அடைந்த தகவல் அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். நாட்டின் வீரம் செறிந்த புதல்வனை இந்த தேசம் இழந்திருக்கிறது. 40 ஆண்டுகளாக சாதனைகளாலும், பராக்கிரமத்தாலும் நிறைந்திருந்த தனது தாய்நாட்டிற்கான தன்னலமற்ற சேவையால் அவரது பணி அமைந்திருந்தது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். ஹெலிகாப்டர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அறிந்து மிகுந்த துயருற்றேன். தங்களது கடமையை ஆற்றும்போது உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அஞ்சலி செலுத்தும் எனது சக குடிமக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், என்று கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது துணைவியார் மதுலிகா ராவத், படைப்பிரிவின் உயரதிகாரிகள் மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தகவலறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன், என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்களின் இரங்கல் செய்தியில், ஜெனரல் பிபின் ராவத் ஒரு தன்னிகரற்ற போர் வீரர். உண்மையான தேச பக்தர், நமது படைகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் அதிநவீனப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். யுக்தி பூர்வமான விவகாரங்களில் அவரது மதிநுட்பமும், கண்ணோட்டமும் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தன. அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது துணைவியார், பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன் என்றும், நாட்டிற்காக அவர்கள் உச்சபட்ச சிரத்தையுடன் சேவையாற்றினார்கள் என்றும் தெரிவித்துள்ள அவர் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பித்துள்ளார்.

இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பணியாற்றிய ஜெனரல் ராவத் பாதுகாப்பு படைகளின் சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நடவடிக்கை எடுத்து வந்தார். ராணுவத்தில் பணியாற்றிய ஒப்புவமையற்ற அனுபவத்தோடு இந்த பதவியில் பொறுப்பேற்றார். இவரது அளப்பரிய சேவையை நாடு நினைவில் கொள்ளும், என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர்: இந்த துயர சம்பவம் குறித்து தனது இரங்கல்களை தெரிவித்துக் கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முப்படைகளின் தலைமை தளபதியாக திகழ்ந்த ஜெனரல் பிபின் ராவத் ஒரு சொல்லொண்ணா துயர விபத்தில் உயிரிழந்த மிக சோகமான தினமாக நமது தேசத்திற்கு இன்றைய தினம் அமைந்து விட்டது. தீரம் மிகுந்த வீரராக திகழ்ந்த அவர் தனது தாய்நாட்டிற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றினார்.

அவரது உறுதிப்பாடும் மெச்சத்தக்க பங்களிப்பும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் மிகவும் துயரமடைந்துள்ளேன். ஜென்ரல் ராவத்தின் துணைவியார் திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 படை வீரர்கள் மறைவிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை அவர்களது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும். விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழகத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி ஜென்ரல் பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 11 பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவரது அகால மரணம் நாட்டிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெனரல் ராவத் அளப்பரிய துணிவுடனும், கண்காணிப்பு உணர்வுடனும் நாட்டிற்காக சேவை புரிந்தவர். முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றிருந்த அவர், பாதுகாப்பு படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தற்போது வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர்: நாட்டின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், மறைவால் வேதனையடைந்ததேன். அவர் நாட்டுக்காக தீரத்துடன் சேவையாற்றினார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பணியாற்றினார். அவரின் சிறப்பான சேவையை நாடு ஒரு போதும் மறவாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் முதல் முப்படை தளபதி #பிபின்ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் நீலகிரி, குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்தது மிகவும் மன வேதனை அளிக்கிறது. நம் தேசத்தின் நலனுக்காக வாழ்ந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...