வெள்ளநீரில் கால் நனையாமல் சேரில் தாவி, காரில் ஏறிய திருமாவளவன் -வீடியோ வைரல்..!!!
- November 30, 2021
- jananesan
- : 677
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், வீட்டில் மழைநீர் சூழ்ந்ததால், அணிந்திருந்த ஷூ நீரில் நனையாமல் இருக்க தொண்டர்கள் உதவியுடன் பார்வையாளர் அமரும் சேரில் மாறி, மாறி வந்து காரில் ஏறிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகர் முழுவதும் வெள்ள நீர் தேங்கி சாலைகளில் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதுடன், மழையும் விடாமல் பெய்து வருவதால் வெள்ளம் வடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மழை வெள்ளம் குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹிட்டடித்து வரும் நிலையில், நேற்று காலையில் இருந்து ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையாக பார்க்கப்பட்டது.
வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் வீட்டினுள் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது. ஆனால் வெளியே செல்ல கிளம்பிய திருமாவளவன் வெள்ள நீரில் கால் நனையாமல் இருக்க, அங்கிருந்தவர்கள் ஒரு அதகள ஏற்பாட்டை அவருக்காக செய்தனர். அதன்படி பார்வையாளர்கள் அமரும் இரும்பு சேர்களை ஒவ்வொன்றாக அடுக்கி அவருக்கு பாதை அமைத்து தந்தனர்.
அந்த சேரின் மீது ஏறி சிறிது தூரம் நடந்த பின்பு அந்த இரும்பு சேரின் மீது திருமாவளவன் நின்றிருக்க அங்கிருந்தவர்கள் வெள்ளத்தில் இறங்கி சேரை இழுத்து வந்து வாசல் வரை விட்டனர். பின்னர் காரின் கதவை திறந்து வெள்ள நீரில் கால்வைக்காமலே சேரில் இருந்து நேரடியாக காருக்குள் ஏறி அமர்ந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இந்த வீடியோவை விடுதலை சிறுத்தைகள் ஐடி பிரிவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வெள்ளத்தில் இறங்கி பார்வையிடுகையில், வெள்ளத்தில் கால் வைக்காமல் திருமாவளவன் செய்த செயல் குறித்தான இந்த வீடியோவை பார்த்த பலரும் எதிர்மறையாக விமர்சித்திருந்தனர்.
Leave your comments here...