குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை – மருத்துவ நிபுணர்கள் கருத்து

இந்தியா

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை – மருத்துவ நிபுணர்கள் கருத்து

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை – மருத்துவ நிபுணர்கள் கருத்து

இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கவில்லை. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரக வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத்தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இது பற்றி அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஒழுங்குமுறை முடிவு ஆகும். ஆனால், பொது சுகாதார பதிலளிப்பை கருத்தில் கொண்டால், பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெரிய அளவில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள். அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடாது.

கொரோனாவுக்கு எதிராக குழந்தைகளுக்கு போடுவதற்கு அங்கீகாரம் பெறுகிற எந்தவொரு தடுப்பூசியும், சவப்பெட்டிக்கான கடைசி ஆணியாக அமைந்து விடாது. குழந்தைகள், கொரோனா தொற்றை பரப்பவில்லை. எனவே கொரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்குத்தான் போட வேண்டும். பிற கொரோனா கால கட்டுப்பாட்டு வழிகாட்டும் நெறிமுறைகளை பெரியவர்கள்தான் பின்பற்ற வேண்டும்.

பெரியவர்களில் குறிப்பாக பாதிக்கப்படுகிற பிரிவினராக உள்ள முதியவர்கள், இணை நோய் உடையவர்கள் போன்றோருக்கு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகக்குறைந்த அளவில்தான் என்பதைத்தான் பல்வேறு ஆதாரங்கள் காட்டுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதே போன்று கொரோனாவுக்கு எதிரான இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய பணிக்குழு உறுப்பினர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:- பெரியவர்களைப் போல இல்லாமல், குழந்தைகள் கொரோனா வைரசின் மோசமான பாதிப்புகளை சந்திக்க மாட்டார்கள், இறக்கவும் மாட்டார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது பயனற்றதாகத்தான் அமையும். கொரோனா சிக்கல்களில் வயதுக்கு முக்கிய பங்கு உண்டு.

மேலும், கொரோனா பாதிப்புக்குள்ளான 20 வயதான ஒருவரைவிட 70 வயதான ஒருவர் இறப்பதற்கான வாய்ப்பு 220 மடங்கு அதிகம். குழந்தைகளைப் பொறுத்தமட்டில் பெரியவர்களைப் போன்று கொரோனாவால் கடுமையான சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு மிகவும் குறைவு.

கேரளாவில் கொரோனாவால் ஏற்படுகிற மரண விகிதம், குழந்தைகளைப் பொறுத்தமட்டில் 0.008 சதவீதம்தான்.கொரோனா தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு 2 மாதங்கள் கொரோனா வராது. ஆனால் இந்த பாதுகாப்பு அப்படியே விரைவில் மங்கத்தொடங்கி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...