குளிர்சாதன வசதியின்றி, ‘இன்சுலின்’ மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இந்தியா

குளிர்சாதன வசதியின்றி, ‘இன்சுலின்’ மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

குளிர்சாதன வசதியின்றி, ‘இன்சுலின்’ மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஐதராபாத்தைச் சேர்ந்த, இந்திய ரசாயன தொழில்நுட்ப மையம், கோல்கட்டாவின் இந்திய ரசாயன உயிரியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து, குளிர்சாதன பெட்டியின்றி, சாதாரண அறையில் இன்சுலின் மருந்தை பாதுகாக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர். வழக்கமாக, இன்சுலின் மருந்தை, 2-8 செல்சியஸ் டிகிரியில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

இதனால், குளிர்சாதன பெட்டி வசதியில்லாத தொலைதுாரங்களில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து கிடைப்பது கடினமாக உள்ளது.

சிலர், இன்சுலின் ஊசி மருந்தை, ஐஸ் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து தினமும் உடலில் செலுத்திக் கொள்கின்றனர். இந்த முறையில் சில சமயம், இன்சுலின் மருந்து உறைந்து விடும் பிரச்னை உள்ளது. அடிக்கடி பணி நிமித்தமாக வெளியூர் செல்வோருக்கும், குளிர்சாதன வசதியுடன் இன்சுலின் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வாக ‘சாதாரண தட்பவெப்பம் நிலவும் அறையில் இருந்தாலும், சிறிதளவும் வீரியம் இழக்காத இன்சுலின் மருந்தை தயாரிக்க முடியும்’ என, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதற்காக, ‘இன்சுலாக்’ என்ற நான்கு அமினோ அமிலங்களின் மூலக்கூறு கலவையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதை, இன்சுலின் மருந்துடன் கலந்து எலிக்கு கொடுத்து சோதித்ததில், மருந்தின் ஆற்றலில் மாறுபாடு இல்லாதது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ‘ஐசயின்ஸ்’ என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

‘இந்த இன்சுலாக் மூலக்கூறுப் பொருள், மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றி பெறும். இதையடுத்து உருவாக்கப்படும் குறைந்த விலை இன்சுலின் மருந்தை, தொலை துாரத்தில் உள்ள நீரிழிவு நோயாளிகளும் சுலபமாக பயன்படுத்த முடியும்’ என, விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய மருந்து நிறுவனங்களுடன் இணைந்து, மனிதர்களிடம் இன்சுலாக் கலந்த இன்சுலின் மருந்தின் சோதனையை மேற்கொள்ளவும், விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave your comments here...