மத்திய அமைச்சர் மகன் கார் மோதி விவசாயிகள் இருவர் பலி : வன்முறையில் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்..!

அரசியல்

மத்திய அமைச்சர் மகன் கார் மோதி விவசாயிகள் இருவர் பலி : வன்முறையில் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்..!

மத்திய அமைச்சர் மகன் கார் மோதி விவசாயிகள் இருவர் பலி : வன்முறையில் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்..!

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதிக்கு வருகை தர இருந்த துணை முதல்வருக்கு, வேளாண் சட்டங்கள் தொடர்பாக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அவர்கள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாயினர்.அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் எட்டு பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊர் உ.பி.,யின் லக்கிம்பூர் கேரிக்கு அருகே உள்ள திக்குனியா. அங்கு இன்று (அக்., 03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். இதனையறிந்த விவசாயிகள் சங்கத்தினர், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டனர். அப்போது மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதல்வரை வரவேற்க தனது காரில் சென்றுள்ளார்.

அவரது காரையும் மறித்து காரின் முன் திரண்டு விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவர்களை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா. இதில் விவசாயிகள் சிலர் படுகாயமடைந்தனர். மூவர் உயிரிழந்ததாக பாரதிய விவசாயிகள் சங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் உட்பட சில கார்களை கொளுத்தியுள்ளனர். இதனால் திக்குனியா கிராமம் கலவர பூமியாகியுள்ளது.இச்சம்பவத்தில் விவசாயிகள் உள்பட எட்டு பேர் வரையில் பலியாகி உள்ளனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்திற்கு கூடுதல் டி.ஜி.பி., பிரசாந்த் குமாரை அனுப்பியுள்ளார். பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத்தும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், “அமைதியாக போராடிய விவசாயிகளை நசுக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் இச்செயல் மனிதாபிமானமற்றது, கொடூரமானது.” என கூறியுள்ளார்.

உ.பி.,யில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதன் காரணமாக விவசாயி ஒருவர் பலியானதாகவும் விவசாயிகள் கூறினர். மேலும் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவும், அவரது மகனை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் இருக்க லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்முறை நடைபெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி இன்று நேரில் செல்வதாக இருந்தது. இதற்காக, அவர் லக்னோவில் இருந்து இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றார்.

ஆனால், பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். மேலும், போலீசார் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave your comments here...