நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்: நிதின் கட்கரி

இந்தியா

நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்: நிதின் கட்கரி

நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்:  நிதின் கட்கரி

ரூ 4,075 கோடி மதிப்பிலான 527 கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் இருந்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

அகமதுநகரிலுள்ள கேட்கானில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திட்டங்களுக்கான பூமிபூஜை மற்றும் நாட்டுக்கு அர்ப்பணித்தல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய தேவைகள் என்று கூறினார். ஏழ்மை, பசி மற்றும் வேலை வாய்ப்பின்மையை நாட்டிலிருந்து ஒழிக்கவும், கிராம மக்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகவும் மேற்கண்ட துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர், சர்க்கரையை எத்தனாலாக மாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். எத்தனால் உற்பத்தி நாட்டின் எரிபொருள் செலவுகளை குறைக்கும் என்று அவர் கூறினார். பிரேசிலை போன்று வாகனங்களை மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயக்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“நம் நாடு 4.65 பில்லியன் லிட்டர் எத்தனாலை கடந்த ஆண்டு உற்பத்தி செய்தது நமக்கு 16.5 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவை. எனவே எவ்வளவு எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும்,” என்று அவர் கூறினார்.

பெட்ரோலை விட எத்தனால் சிறப்பானது மற்றும் விலை குறைவானது என்று கூறிய அவர், நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநில அரசு எங்கெல்லாம் நிலத்தை வழங்குகிறதோ அங்கெல்லாம் சரக்கு போக்குவரத்து பூங்காக்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் போக்குவரத்து நகரங்களை உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கூறினார். சர்க்கரை தொழில் மற்றும் பால் உற்பத்தியின் காரணமாக மேற்கு மகாராஷ்டிராவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave your comments here...