சரவெடி தயாரிப்பது மற்றும் இருப்பு வைத்திருப்பதை தவிர்க்குமாறு, பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சுற்றறிக்கை..!

சமூக நலன்

சரவெடி தயாரிப்பது மற்றும் இருப்பு வைத்திருப்பதை தவிர்க்குமாறு, பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சுற்றறிக்கை..!

சரவெடி தயாரிப்பது மற்றும் இருப்பு வைத்திருப்பதை தவிர்க்குமாறு, பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சுற்றறிக்கை..!

சிவகாசி பகுதியில் உள்ள, மத்திய வெடி பொருள் கட்டுப்பாடு உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் சரவெடிகள் தயாரிப்பதையும், இருப்பு வைப்பதையும் தவிர்க்குமாறு சங்க உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை உள்பட பல பகுதிகளில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், மத்திய வெடி பொருள் கட்டுப்பாடுத்துறை உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நவீன பட்டாசுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வானவெடிகள், பட்டாசு ரகங்கள் தயாரிக்கப்படுவது வழக்கம்.

சிவகாசியில் மத்திய வெடி பொருள் கட்டுப்பாடுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில், மத்திய வெடி பொருள் கட்டுப்பாடுத்துறை துணை கண்காணிப்பாளர் தியாகராஜன் தலைமையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரி தியாகராஜன், பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும்.

சரவெடிகள் தயாரிப்பது, இருப்பு வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது என்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். எனவே பட்டாசு ஆலைகளில் சரவெடிகள் தயாரிப்பது மற்றும் இருப்பு வைத்திருப்பது தெரிய வந்தால், அந்த பட்டாசு ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சரவெடிகள் விற்பனை செய்யும் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, டான்பாமா சங்கம் சார்பாக தங்களது சங்க உறுப்பினர்களுக்கு இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தீபாவளி சமயத்தில் வெடி பொருள் கட்டுப்பாடுத்துறை அறிவிப்புகளை கடைப்பிடிக்க வேண்டும்.

பட்டாசு ஆலைகளில் சரவெடிகள் தயாரிப்பதையும், அவற்றை குடோன்களில் இருப்பு வைப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மத்திய வெடி பொருள் கட்டுப்பாடுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது சரவெடிகள் தயாரிப்பதும், இருப்பு வைத்திருப்பதும் தெரிய வந்தால், அந்தப் பட்டாசு ஆலைகள் கால வரையறையின்றி மூடப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுப்பார்கள்.

எனவே இந்த நடவடிக்கையை பட்டாசு ஆலைகள் தவிர்ப்பதற்கான முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சரவெடிகள் தயாரிப்பது மற்றும் இருப்பு வைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் மட்டும் உள்ள நிலையில் சரவெடிகள் தயாரிக்கவும், இருப்பு வைத்திருக்கவும் கூடாது என்ற தகவல் பட்டாசு தயாரிப்பாளர்களையும், பட்டாசு விற்பனையாளர்களையும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

செய்தி : ரவிசந்திரன்

Leave your comments here...