அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு..! இந்தியாவில் தொழில் துவங்க அழைப்பு

இந்தியாஉலகம்

அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு..! இந்தியாவில் தொழில் துவங்க அழைப்பு

அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களுடன் மோடி சந்திப்பு..! இந்தியாவில் தொழில் துவங்க அழைப்பு

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு முன்னணி தொழிலதிபர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

குவாட் மாநாட்டில் பங்கேற்க வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி சிறிது நேர ஓய்வுக்குப் பின், அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
நான்கு நாள் பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற பிரதமர் மோடி, நேற்று அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களை நேற்று சந்தித்து பேசினார். ‘குவால்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் அடாமிக்ஸ், பிளாக்ஸ்டோன்’ ஆகிய நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.அடோப் தலைமை செயல் அதிகாரி ஷாந்தனு நாராயணிடம், இந்தியாவில் குவிந்துள்ள பொருளாதார வாய்ப்புகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.


இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.


தொடர்ந்து ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விவேக் லாலை பிரதமர் மோடி சந்தித்தார்.அமெரிக்காவிடமிருந்து 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு 30 ட்ரோன்களை வாங்க இந்தியா விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதன்பின் குவால்காம் நிறுவன தலைமை நிர்வாகி கிறிஸ்டியானோ அமோனுடன் பிரதமர் பேசினார். இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் மின்னணு துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இந்திய செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை, அவர்கள் விவாதித்தனர்.


இதையடுத்து பர்ஸ்ட் சோலார் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மரை பிரதமர் சந்தித்தார். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் மற்றும் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 450 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை எட்டுவதற்கான இந்தியாவின் இலக்கு குறித்து இருவரும் பேசினர். சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் பிரத்யேக மெல்லிய சுருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிப்பு வசதிகளை நிறுவுவது குறித்தும், சர்வதேச விநியோக சங்கிலிகளில் இந்தியாவை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


உலகின் பிரபலமான முதலீட்டு நிறுவனமான பிளாக் ஸ்டோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் வார்சனை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள துறைகளை தெரிவித்தார்.

தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றி பிரதமர் அலுவலகம் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:பிரதமர் மோடி உடனான அமெரிக்க தொழில் அதிபர்களின் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. இந்தியாவில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளை பிரதமர் மோடி அவர்களிடம் எடுத்துரைத்தார். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...