புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் மீன்கள் விலை வீழ்ச்சி : இறைச்சி கடைகளிலும் கூட்டம் குறைவு.!

தமிழகம்

புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் மீன்கள் விலை வீழ்ச்சி : இறைச்சி கடைகளிலும் கூட்டம் குறைவு.!

புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் மீன்கள் விலை வீழ்ச்சி : இறைச்சி கடைகளிலும் கூட்டம் குறைவு.!

புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இறைச்சி கடைகளிலும் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்களை கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். நேற்று காலை கடலுக்கு சென்று விட்டு மாலை 4 மணிக்கு கரைக்கு திரும்பிய மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியது. இதையடுத்து கரையில் மீன்களை ஏலம் விட்டனர்.

ஆனால் நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் மீன்களை ஏலம் எடுக்க நிறைய வியாபாரிகள் வரவில்லை. மேலும் புரட்டாசி மாத விரதம் இருப்போரும் மீன்கள் வாங்க துறைமுகத்திற்கு வரவில்லை. இதனால் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்தது. ஆறுகாட்டுத்துறை துறைமுகத்தில் முன்பு கிலோ ரூ.600க்கு விற்ற காலா மீன் ரூ.400க்கும், சீலா மீன் ரூ.500ல் இருந்து ரூ.300க்கும், இறால் மற்றும் நண்டு ரூ.400ல் இருந்து ரூ.250க்கும் விலை போனது. மீன்கள் விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலையடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், கோழி, ஆடு இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகளவில் கூடும். ஆனால் இன்று இறைச்சி கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது

இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் மீன்கள் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. திருச்சி லிங்கநகர் மீன் மார்க்கெட்டில் ரூ.350க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ஊழி மீன் ரூ.150க்கும், ரூ.500க்கு விற்கப்பட்ட விரால் ரூ.400, ரூ.500க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.300, ரூ.200க்கு விற்கப்பட்ட சங்கரா ரூ.140, ரூ.200க்கு விற்கப்பட்ட நெத்திலி ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ரூ.400க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நண்டு ரூ.250க்கு விற்பனையானது.

Leave your comments here...