கன்னியாகுமரி முதல் ராஜ்காட்: சிஆர்பிஎஃப்-இன் 2850 கிலோமீட்டர் மிதிவண்டி பயணம்.!

இந்தியா

கன்னியாகுமரி முதல் ராஜ்காட்: சிஆர்பிஎஃப்-இன் 2850 கிலோமீட்டர் மிதிவண்டி பயணம்.!

கன்னியாகுமரி முதல் ராஜ்காட்: சிஆர்பிஎஃப்-இன் 2850 கிலோமீட்டர் மிதிவண்டி பயணம்.!

இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசின் முன்முயற்சியான விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக, கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில் இருந்து மத்திய ரிசர்வ் காவல் படை ஏற்பாடு செய்திருந்த மிதிவண்டி பயணம் இன்று காலை கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது. ‘கன்னியாகுமரி முதல் ராஜ்காட் வரை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணம், 2850 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து அக்டோபர் 2-ஆம் தேதி புதுதில்லியின் ராஜ்காட்டில் நிறைவடையும்.

தமிழக அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், மத்திய ரிசர்வ் காவல் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களின் முன்னிலையில் இந்த மிதிவண்டி பயணத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் வழியாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும். நாளொன்றுக்கு 70-80 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் கொண்டாட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் உயரிய தியாகங்களைப் போற்றும் விதமாகவும், பயணிக்கும் வழியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் நேரில் சென்று பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

15 மிதிவண்டி ஓட்டுநர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பயணத்திற்கு, பள்ளிபுரம் மத்திய ரிசர்வ் காவல் படை குழு மையத்தின் துணைத் தலைவர் திரு பிரதீப் குமார் தலைமை வகிப்பார். இந்த குழுவினருடன் மருத்துவக் குழுவும் உடன் செல்கிறது.

இன்று நடைபெற்ற துவக்க விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோன்று, அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாத், குஜராத்தின் சபர்மதி மற்றும் ஜம்முவிலிருந்தும் மேலும் மூன்று பிரம்மாண்ட மிதிவண்டி பயணங்கள் விரைவில் துவங்கப்பட்டு அக்டோபர் 2-ஆம் தேதி ராஜ்காட்டில் நிறைவடையும்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை அனைத்து துறைகளும் அமைச்சகங்களும் நடத்தவுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கௌரவிக்கவும், சிறப்பு வாய்ந்த தருணத்தைக் குறிக்கவும் தனது 400 நிலையான மற்றும் 1200 கள அமைப்புகளில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு மத்திய ரிசர்வ் காவல் படை, முழு உற்சாகத்துடன் ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...