கொரோனா நிவாரண நடவடிக்கைகளில் ஏழைகளுக்கு முக்கியத்துவம் – பிரதமர் மோடி

இந்தியா

கொரோனா நிவாரண நடவடிக்கைகளில் ஏழைகளுக்கு முக்கியத்துவம் – பிரதமர் மோடி

கொரோனா நிவாரண நடவடிக்கைகளில் ஏழைகளுக்கு முக்கியத்துவம் – பிரதமர் மோடி

கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் உத்திகளில் 80 கோடி குடிமக்கள் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவது மட்டுமல்லாமல், 8 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள், இலவச சமையல் எரிவாயுவையும் அளிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதலமைச்சர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்:- மத்தியப் பிரதேச மாநில மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து தமது உரையைத் தொடங்கினார். இது போன்ற கடினமான சூழலில் இந்திய அரசும், ஒட்டுமொத்த நாடும் மாநில மக்களுடன் துணை நிற்பதாக அவர் உறுதி அளித்தார்.மத்தியப் பிரதேசத்தில் இந்தத் திட்டத்தினால் சுமார் 5 கோடி பயனாளிகள், பயனடைந்து வருகிறார்கள்.


ஓர் நூற்றாண்டில் ஏற்படும் மோசமான பேரிடராக கொரானா பெருந்தொற்றைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த சவாலை எதிர்த்து ஒட்டுமொத்த நாடும் இணைந்து போராடியதாகக் கூறினார். கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் உத்திகளில் ஏழைகளுக்கு உயரிய முன்னுரிமையை இந்தியா அளித்ததாக அவர் மீண்டும் எடுத்துரைத்தார். முதல் நாளிலிருந்தே ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் வேலை வாய்ப்பை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது.

80 கோடி குடிமக்கள் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவது மட்டுமல்லாமல், 8 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள், இலவச சமையல் எரிவாயுவையும் பெறுகின்றன. சுமார் 20 கோடி பெண்களின் ஜன்தன் கணக்குகளில் ரூ. 30,000 கோடி நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது. அதேபோல தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. சுமார் 10-11 கோடி விவசாய குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலுத்தப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் 50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், பல நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையான எண்ணிக்கையில், இந்தியா ஒரு வாரத்தில் தடுப்பூசியை செலுத்துவதாகக் கூறினார். “இது, தன்னிறைவு அடைந்து வரும் இந்தியாவின், புதிய இந்தியாவின் புதிய செயல் திறன்”, என்று அவர் தெரிவித்தார். இந்த தடுப்பூசி, பாதுகாப்பானது மற்றும் பயனளிக்கக் கூடியது என்று கூறிய பிரதமர், தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் போது இந்தியாவில் குறைந்த அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்படுவதை உறுதி செய்வதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். சிறு மற்றும் குறு தொழில்கள் தொடர்ந்து இயங்கவும், அதன் பங்குதாரர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டது.

ஒரே தேசம், ஒரே ரேஷன் அட்டை, நியாயமான வாடகை திட்டம், பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் மூலம் அணுகக்கூடிய மற்றும் எளிதில் கடன் பெறும் வசதி,உட்கட்டமைப்பு திட்டங்கள் முதலியவை தொழிலாளர் வகுப்பினருக்கு பெரும் உதவிகரமாக இருந்தது. இரட்டை எஞ்சின் அரசினால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்துப் பேசுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை விற்பனையில் சாதனை படைத்த மாநில அரசைப் பாராட்டினார். மத்திய பிரதேசத்தில், இந்த ஆண்டு, சுமார் 17 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கோதுமைக்கான ரூபாய் 25,000 கோடி, அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான கோதுமை விற்பனை மையங்களை இந்த ஆண்டு மாநிலம் உருவாக்கியுள்ளது. இரட்டை எஞ்சின் அரசுகளில்’, மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் துணை புரிந்து, அவற்றை மேம்படுத்துவதுடன் அவற்றின் ஆற்றலையும் அதிகரிக்க வேண்டும். பீமாரு (பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம்) மாநிலங்களின் பிம்பத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே திரு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்தியப் பிரதேசம் உடைத்துள்ளது.

தற்போதைய ஆட்சியின் கீழ் அரசு திட்டங்கள் விரைவாக சென்றடைவதைக் குறிப்பிட்ட பிரதமர், முந்தைய அரசு அமைப்புகளின் பிழைகளை சுட்டிக் காட்டினார். அவர்கள் ஏழைகளை பற்றி கேள்வி எழுப்பி, பயனாளிகளின் கருத்துக்களை பரிசீலிக்காமல், தாங்களாகவே பதில்களை அளிப்பார்கள் என்று அவர் கூறினார். வங்கி கணக்குகள், சாலை, எரிவாயு இணைப்பு, கழிவறை, தண்ணீர் குழாய், கடன்கள் போன்ற வசதிகள் ஏழை மக்களுக்கு பயனளிக்காது என்று கருதப்பட்டது.

இந்த பொய்யான கூற்றால், ஏழை மக்கள் நீண்ட காலம் பின் தங்கிய நிலையில் இருந்தனர். ஏழை மக்களைப் போல, தற்போதைய தலைமையும் கடினமான சூழல்களைக் கடந்துவந்து, நிலைமையைப் புரிந்து கொண்டுள்ளது. ஏழைகளுக்கு வலிமை சேர்க்கவும், அதிகாரம் அளிக்கவும் உண்மையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று, ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, புதிய வேலைவாய்ப்புகள் வளர்ந்து வருகின்றன, விவசாயிகள் சந்தைகளை அணுகுவது எளிமையாக்கப்பட்டுள்ளது, நோயினால் பாதிக்கப்பட்ட போது ஏழைகள் உரிய காலத்தில் மருத்துவமனையை சென்றடைய முடிகிறது.

தேசிய கைத்தறி தினமான இன்று, கடந்த 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி சுதேசி இயக்கம் துவங்கப்பட்டதை நினைவுக் கூர்ந்தார். ஊரக ஏழை மற்றும் பழங்குடி பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஓர் பிரம்மாண்ட பிரச்சாரம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நமது கைவினைக் கலை, கைத்தறி மற்றும் ஜவுளித் துறையின் பணியாளர்களை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும். உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிப்பதே இந்த இயக்கம்.

இந்த உணர்வுடன் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார். காதி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நினைவை விட்டு நீங்கியிருந்த காதி, தற்போது துடிப்பான அடையாளமாக வளர்ந்திருப்பதாகக் கூறினார். “சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நோக்கிய பயணத்தில் நாம் முன்னேறும் வேளையில், காதியில் சுதந்திர உணர்வை நாம் வலுப்படுத்த வேண்டும்”, என்று பிரதமர் தெரிவித்தார். வரவிருக்கும் பண்டிகைகளின் போது ஒரு சில உள்ளூர் கைவினைப் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

தமது உரையை நிறைவு செய்யும்போது, பண்டிகை காலங்களில் கொரோனா பற்றிய சிந்தனை மறக்கப்படுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார். மூன்றாவது அலையைத் தடுப்பதன் அவசியத்தை கடுமையாக வலியுறுத்திய அவர், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். “ஆரோக்கியமான இந்தியா மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க உறுதி மொழி ஏற்க வேண்டும்”, என்று கூறி திரு மோடி உரையை நிறைவு செய்தார்.

Leave your comments here...