ரயில்வேயை தனியார்மயம் படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை – மத்திய ரயில்வே அமைச்சர் திட்டவட்டம்.!

இந்தியா

ரயில்வேயை தனியார்மயம் படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை – மத்திய ரயில்வே அமைச்சர் திட்டவட்டம்.!

ரயில்வேயை தனியார்மயம் படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை – மத்திய ரயில்வே அமைச்சர் திட்டவட்டம்.!

இந்திய ரயில்வேயை தனியார்மயப் படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

இந்திய ரயில்வேயை தனியார்மயப் படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை. இடவசதியின்மையால் சுமார் 5 கோடி பயணிகள் 2019-20-ம் ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்தனர். இந்த இடைவெளியை சமன் செய்வதற்காக, வந்தே பாரத், தேஜாஸ், எல்எச்பி மற்றும் விஸ்டாடோம் உள்ளிட்ட பெட்டிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை இந்திய ரயில்வே ஏற்கனவே எடுத்து வருகிறது.

அரசு-தனியார் கூட்டு முறையின் கீழ் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 151 ரயில்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இந்திய ரயில்வே வரவேற்றிருந்தது. இந்த ரயில்கள் ஏற்கனவே உள்ள ரயில் சேவைகளுக்கு கூடுதலாக இருக்குமே தவிர, தற்போதுள்ள பயணிகள் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்படமாட்டாது.

மேலும் தகவல்களை http://www.indianrailways.gov.in/IndicativeRoutesfor12clusters.pdf எனும் தளத்தில் பார்க்கலாம். ஆதர்ஷ் நிலைய திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் மேம்பாடு/நவீனமயமாக்கல் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் கீழ் தெற்கு ரயில்வேக்கு 2018-19-ல் ரூ 108.47 கோடியும், 2019-20-ல் ரூ 111.55 கோடியும், 2020-21-ல் ரூ 213.11 கோடியும், 2021-22-ல் 224.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1253 ரயில் நிலையங்கள் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 2022 மார்ச் 23 முதல் வழக்கமான பயணிகள் ரயில் சேவைகளை இந்திய ரயில்வே தற்காலிமாக நிறுத்தியது.மாநில அரசுகளின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தேவை அதிகமுள்ள தடங்களில் ‘க்ளோன் ரயில்கள்’ இயக்கப்படுகின்றன. 2021 ஜூலை 26-ன் படி, 22 க்ளோன் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு வருடங்களில் ரயில் விபத்துகளின் விளைவாக பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை. 2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து வருடங்களில் விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன.2019 ஜனவரி 31 அன்று ஆளில்லாத அனைத்து லெவல் கிராசிங்குகளையும் இந்திய ரயில்வே நீக்கியது. மக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்து வருகிறது.

இந்திய ரயில்வேயின் 5374 ரயில் நிலையங்களில் காத்திருப்பு அறைகள்/கூடங்கள் உள்ளன. மிச்சமிருக்கும் நிலையங்களில் அமர்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான/நவீனமயப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி நிலைமையின் அடிப்படையில் இவை செய்யப்படுகின்றன.

அகலப்பாதை தடங்களை துரித கதியில் மின்மயமாக்குவதற்கான மிகப்பெரிய திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. கொங்கன் ரயில்வேயின் 740 ரூட் கிலோமீட்டர் உள்ளிட்ட 64,689 ரூட் கிலோமீட்டருக்கான மொத்த அகலப்பாதை தடங்கள் இந்திய ரயில்வேயில் உள்ளன.

இதில் 71 சதவீதம் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டு விட்டன. மிச்சமிருப்பவற்றை மின்மயமாக்குவதற்கான பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. 2016-17-ம் ஆண்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ 3,396 கோடியாகவும், செலவு ரூ 2,956 கோடியாகவும் இருந்த நிலையில், 2020-21-ம் ஆண்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ 6,326 கோடியாகவும், செலவு ரூ 6,141 கோடியாகவும் இருந்தது.

Leave your comments here...