டெல்டா வகை தொற்று, ஆல்ஃபா வகையை விட 40-60% அதிகமாகப் பரவக்கூடியது : டாக்டர் என்.கே .அரோரா

இந்தியா

டெல்டா வகை தொற்று, ஆல்ஃபா வகையை விட 40-60% அதிகமாகப் பரவக்கூடியது : டாக்டர் என்.கே .அரோரா

டெல்டா வகை தொற்று, ஆல்ஃபா வகையை விட 40-60% அதிகமாகப் பரவக்கூடியது : டாக்டர் என்.கே .அரோரா

டெல்டா வகை தொற்று, ஆல்ஃபா வகையை விட 40-60% அதிகமாகப் பரவக்கூடியது என மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் உப தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.!

கொவிட் பரிசோதனை மற்றும் தொற்றின் மாறுபாடுகளைக் கண்டறிவதற்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள், டெல்டா வகை தொற்று வேகமாக பரவுவதன் காரணம், மரபணு கண்காணிப்பின் வாயிலாக அதன் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, கொவிட் சரியான வழிகாட்டு நெறிமுறையின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் உப தலைவர் டாக்டர் என் கே அரோரா அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக ஒட்டுமொத்த மரபணு வேறுபாடுகளை கண்டறிவதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் 28 ஆய்வகங்கள் அடங்கிய குழுவே, மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பாகும்.

டாக்டர் என் கே அரோரா தெரிவித்துள்ளதாவது:

ஒட்டுமொத்த நாடும் புவியியல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆய்வகமும் குறிப்பிட்ட மண்டலத்திற்கு பொறுப்பு வகிக்கும். ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு மாவட்டங்கள் என மொத்தம் 180-190 தொகுப்புகளை நாங்கள் வடிவமைத்துள்ளோம். நோக்கின்றி எடுக்கப்படும் மாதிரிகள் மற்றும் தீவிர உடல் உபாதை ஏற்படும் நோயாளிகளின் மாதிரிகள், தடுப்பூசியால் ஏற்படும் தொற்று போன்றவை சேகரிக்கப்பட்டு மண்டல ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு மாதத்தில் சுமார் 50000 மாதிரிகளை பரிசோதிக்கும் திறனை தற்போது நாம் பெற்றுள்ளோம். முன்னதாக இந்த எண்ணிக்கை சுமார் 30,000 மாதிரிகளாக இருந்தது.

பி.1.617.2 என்ற கொவிட்-19 வகை, டெல்டா வகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று, நம் நாட்டில் இரண்டாவது அலை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது ஏற்படும் புதிய பாதிப்புகளில் 80%, இந்த வகை தொற்றாகும். மகாராஷ்டிராவில் உருவாகிய இந்தத் தொற்று, வடக்கு நோக்கி நகர்ந்து நாட்டின் மேற்கு மாநிலங்களிலும் அதைத்தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மனித உயிரணுக்களில் புகுந்த பிறகு இந்த தொற்று வகை வேகமாகப் பரவுகிறது. நுரையீரல் போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனினும் டெல்டா வகை தொற்று மிகவும் தீவிரமானது என்பது கூறுவது கடினம். இந்தியாவில் இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் முதல் அலையை ஒத்திருந்தது.

டெல்டா பிளஸ் வகை- ஏஒய்.1 மற்றும் ஏஒய்.2 ஆகியவை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 55-60 பேருக்கு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. ஏஒய்.1 வகை தொற்று நேபாளம், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, போலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஒய்.2 வகை தொற்று, குறைவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் பற்றி இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், டெல்டா வகை தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்று இது சம்பந்தமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் மேற்கொண்டுள்ள ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Leave your comments here...