தடுப்பூசி சான்றிதழ் விவகாரம் : ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி

இந்தியாஉலகம்

தடுப்பூசி சான்றிதழ் விவகாரம் : ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி

தடுப்பூசி சான்றிதழ் விவகாரம் :  ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி

இந்திய அரசின் கோவின் போர்ட்டல் வழங்கிய தடுப்பூசி சான்றிதழை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்காமல் இந்திய பயணிகளை தனிமைப்படுத்தினால், அவர்களின் தடுப்பூசி சான்றையும் ஏற்காமல் ஐரோப்பியர்களை தனிமைப்படுத்தும் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமானது 27 உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பு. இந்நாடுகளிடையே கட்டுப்பாடுகளின்றி பயணிக்க ‘க்ரீன் பாஸ்’ திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்தது. அதன்படி ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை பெற்ற வெளிநாட்டவர்களுக்கு டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் வழங்கப்படும். அவர்களுக்கு பயண கட்டுப்பாடுகள் கிடையாது. மேலும், உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை பெற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளலாம் என கூறியிருந்தது.

இந்த டிஜிட்டல் கோவிட் தடுப்பூசி சான்றிதழில் இந்திய தடுப்பூசியான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டுமே இடம்பெறவில்லை. ஏனென்றால் அவை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தால் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. கோவின் டிஜிட்டல் தடுப்பூசி சான்றையும் அவர்கள் ஏற்பதில்லை.

இதனால் தடுப்பூசியே போட்டிருந்தாலும் இந்தியர்கள் கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பிறகே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டும், ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ள வேக்சேவ்ரியா தடுப்பூசியும், அஸ்ட்ராசெனகா என்ற ஒரே நிறுவனத்தின் மூலக்கூறு கொண்டவை.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனிடம் மத்திய அரசு “கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினை உங்களது டிஜிட்டல் கோவிட் சான்றிதழில் சேர்த்தால் மற்றும் கோவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்தால், பதிலுக்கு நாங்களும் ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழை அங்கீகரிப்போம்.

அதன் மூலம் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இந்திய சுகாதார அதிகாரிகள் பரஸ்பரம் விலக்கு அளிப்பார்கள்.” என கூறியுள்ளது. இதன் பொருள் ‘என் சான்றிதழை ஏற்க மறுத்தால், உன் சான்றிதழை ஏற்க மாட்டேன்’ என்பதாகும். அரசின் இந்த அறிவிப்பால் விரைவில் இந்திய தடுப்பூசி சான்றிதழை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கும் என வெளியுறவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave your comments here...