தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகம்

தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. காவல்துறையினர்  மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும். – புதிய டிஜிபி சைலேந்திர பாபு

தமிழ்நாட்டில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியது.

இந்நிலையில், யுபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. புதிய டிஜிபியாக பதவியேற்றுக்கொண்ட சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து கூறினார் திரிபாதி. விடைபெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைக்கப்பட்டது.

சைலேந்திரபாபு ஐபிஎஸ்

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 5- ம் தேதி சைலேந்திரபாபு பிறந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அரசு உயர்நிலை பள்ளியில் படித்து, தமிழக காவல்துறை தலைவராக உயர்ந்துள்ளார். 1987-ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி. எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஹெச்டி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை படித்து பட்டம் பெற்றவர். சைபர்கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்திருக்கிறார். 25 -வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியானார் சைலேந்திரபாபு. கோபிச் செட்டிப்பாளையத்தில் ஏஎஸ்பியாக பணியைத் தொடங்கிய இவர் எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் பணியாற்றினார். சென்னை அடையாறு துணை கமிஷனாராகவும் பணியாற்றியவர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய போதுதான், பள்ளிச் சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மோகனகிருஷ்ணனைக் என்கவுன்டரில் சுடப்பட்டார். பின்னர் சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றார். அதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். 2015- ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல்போல சூழ்ந்து கொண்டது. உடனடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு கடலோர பாதுகாப்பு குழும நீச்சல் வீரர்களுடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.

சிறைத்துறை தலைவராக சைலேந்திரபாபு பணியாற்றியபோது சிறைக்கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம், கைதிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். தண்டனை முடிந்து விடுதலை ஆகும் கைதிகளுக்கு இந்தத் திட்டங்கள் மறுவாழ்வை அளித்தது.தீயணைப்புத்துறையில் டிஜிபியாக கூடுதல் பொறுப்பில் இருந்த போது அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பல நடவடிக்கை எடுத்தார். ரயில்வே காவல்துறை டிஜிபியாக பணியாற்றியபோது பல குற்ற வழக்குகளை திறம்பட துப்பு துலக்கினார்.

சைலேந்திரபாபு, குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்காக பாரதப் பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றி வீரதீர செயல்கள் ஆற்றியதற்காக முதல்வர் பதக்கம் ஆகியவற்றை பெற்றியிருக்கிறார். இவர் சில நூல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸாக லட்சியத்தோடு இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்து .வருகிறார்

இந்நிலையில் இன்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., ஆக சைலேந்திரபாபு (ஜூன் 30) அவர் பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: காவல்துறையின் தலைமை பொறுப்பை ஏற்பது அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்து, விரிவாக விசாரணை நடத்தி, அதற்கு முடிவு கண்டு முதல்வருக்கு அறிக்கை அனுப்பி வைப்போம்.

மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடனும், மனித நேயத்துடனும் நடக்க வேண்டும். இதற்காக போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். போலீசார் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்திரிகை, மீடியா துறையினர் உதவ வேண்டும். இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.

Leave your comments here...