காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து 15 ரயில் நிலையங்களுக்கும் பொது வைஃபை சேவை

இந்தியா

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து 15 ரயில் நிலையங்களுக்கும் பொது வைஃபை சேவை

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து 15 ரயில் நிலையங்களுக்கும் பொது வைஃபை சேவை

ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து 15 ரயில் நிலையங்களும் இந்திய ரயில்வேயின் வைஃபை இணைப்புகளைப் பெற்று 6021 நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர், படுகாவோன், பனிஹல் மற்றும் குவாசிகண்டில் உள்ள மொத்தம் 15 ரயில் நிலையங்களுக்கு ரயில்வயர் என்ற பெயரில் அளிக்கப்படும் பொது வைஃபை சேவை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு யூனியன் பிரதேசத்தில் உள்ள 15 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.அனைத்து ரயில் நிலையங்களிலும் பொது வைஃபை சேவையை வழங்கும் பொறுப்பை ரயில்டெல் நிறுவனத்திடம் ரயில்வே அமைச்சகம் ஒப்படைத்தது. மின்னணு வசதியை உள்ளடக்கிய தளமாக ரயில்வேயை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். உலகளவில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வைஃபை இணைப்பாக, நம் நாட்டில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ள மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல், “மக்களை இணைக்கும் பணியில் வைஃபை குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பதோடு, ஊரக மற்றும் நகர்ப்புற இந்தியாவிற்கு இடையேயான மின்னணு இடைவெளியை விரைந்து நீக்கும் பாலமாகவும் விளங்குகிறது.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதிவிரைவான வைஃபை சேவையை வழங்கும் முக்கிய பணியில் ரயில்டெல் இந்திய கழகத்துடன் இணைந்து இந்திய ரயில்வே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உலக வைஃபை தினமான இன்று, 6000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தி உலகளவில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பொது வைஃபை இணைப்பில் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 14 ரயில் நிலையங்களும் சேர்ந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து நிலையங்களுக்கும் வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது. மின்னணு இந்தியா இயக்கத்தில் இது ஓர் முக்கிய நடவடிக்கையாக அமைவதுடன் தொடர்பற்றவர்களிடையே தொடர்பை ஏற்படுத்தும் மிக முக்கிய பணியையும் இது மேற்கொள்ளும். இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்துவதற்கு அயராமல் பணிபுரிந்த இந்திய ரயில்வே மற்றும் ரயில்டெல் குழுவினருக்கு எனது பாராட்டுகள்”, என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...