கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக்கூடாது – சர்வதேச பேரிடர் உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

இந்தியா

கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக்கூடாது – சர்வதேச பேரிடர் உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக்கூடாது –  சர்வதேச பேரிடர்  உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

சர்வதேச பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.ஃபிஜி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அரசுகளில் பணியாற்றுவோர், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார்துறை உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது- “நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் பேரிடர் என்று கருதப்படும் நிகழ்வை நாம் சந்தித்து வருகிறோம். ஒருவரை ஒருவர் சார்ந்து, இணைந்து செயல்படும் உலகில் வளமிக்க அல்லது ஏழ்மை நிலையிலுள்ள, கிழக்கு அல்லது மேற்கு, வடக்கு அல்லது தெற்கில் அமைந்துள்ள எந்தவொரு நாடும் சர்வதேச பேரிடர்களின் தாக்கத்திலிருந்து தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கருத முடியாது என்பதை கொவிட்-19 பெருந்தொற்று கற்றுத் தந்துள்ளது”, என்று கூறினார்.

உலகம் எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பதை பெருந்தொற்று எடுத்துரைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். “சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய கண்டுபிடிப்புகள் எங்கிருந்து வேண்டுமானாலும் உருவாகலாம் என்பதை பெருந்தொற்று எடுத்துக்காட்டியுள்ளது”, என்று அவர் தெரிவித்தார்.


இதற்காக, உலகின் அனைத்துப் பகுதிகளின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச சூழலை உருவாக்குவதோடு, தேவை ஏற்படும் பகுதிகளுடன் அவற்றை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார். 2021 ஆம் ஆண்டு, பெருந்தொற்றிலிருந்து விரைவில் மீள்வதற்கான உறுதியை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பெருந்தொற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறக்கக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். பொது சுகாதார பேரிடர்களுக்கு மட்டுமல்லாமல் இதர பேரிடர்களுக்கும் அவை பொருந்தும். பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு நிலையான மற்றும் ஒற்றுமையான நடவடிக்கைகள் தேவைப்படும் என்று அவர் கூறினார் .

இந்தியாவைப் போன்று உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகள், இது நெகிழ்திறனுக்கான முதலீடு என்பதையும் இடர்பாடுகளுக்கானது அல்ல என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கப்பல் இணைப்புகள், விமான இணைப்புகள் போன்ற ஏராளமான உள்கட்டமைப்பு அமைப்புகள் உலகம் முழுவதையும் இணைப்பதால் உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் பேரிடரின் பாதிப்பு உலகம் முழுவதும் விரைவாக பரவக்கூடும். சர்வதேச அமைப்பின் நெகிழ்திறனை நிலைநாட்டுவதில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

2021 ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நிலையான வளர்ச்சி இலக்குகள், பாரிஸ் ஒப்பந்தம், சென்டாய் கட்டமைப்பு ஆகியவற்றின் மையப் புள்ளியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டின் பின் பகுதியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகள் நடத்தவுள்ள ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் உச்சி மாநாடு பற்றிய எதிர்பார்ப்பு மிகவும் உயர்வாக உள்ளது.நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மீதான இந்தக் கூட்டணி, இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் பற்றி பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். முதலாவதாக, “ஒருவரையும் பின்தங்கவிடக்கூடாது” என்ற நிலையான வளர்ச்சி இலக்குகளின் முக்கிய உறுதிமொழியை பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி எடுத்துரைக்க வேண்டும்.

அதாவது அதிக பாதிப்புக்குள்ளாகும் நாடுகள் மற்றும் சமூகங்களின் கருத்துக்களுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இரண்டாவதாக முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் செயலாற்றல் குறித்து நாம் அலசி ஆராய வேண்டும். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் முக்கிய பங்கு வகித்த சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறைகள். இந்தத் துறைகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? மூன்றாவதாக நெகிழ்திறன் குறித்த நமது தேடுதலில் எந்த ஒரு தொழில்நுட்ப முறையும் மிகவும் சாமானியமானது அல்லது மிகவும் மேம்பட்டது என்று கருதப்படக் கூடாது. தொழில்நுட்பங்களின் பயன்பாடு பற்றிய செயல் விளக்கங்களை பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி அதிகரிக்க வேண்டும்.

இறுதியாக, “நெகிழ்திறன் உள்கட்டமைப்பு” என்ற கருத்து, வல்லுநர்கள் மட்டுமல்லாது, முறைசார் நிறுவனங்களின் ஆற்றலையும் உள்ளடக்கிய மாபெரும் இயக்கமாக மாற வேண்டும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

Leave your comments here...