பட்ஜெட் 2021 : நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் பட்ஜெட்டாக உள்ளது – பிரதமர் மோடி புகழாரம்

இந்தியா

பட்ஜெட் 2021 : நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் பட்ஜெட்டாக உள்ளது – பிரதமர் மோடி புகழாரம்

பட்ஜெட் 2021 : நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் பட்ஜெட்டாக உள்ளது –  பிரதமர் மோடி புகழாரம்

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டை பாராட்டிய பிரதமர் மோடி கூறியதாவது:-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அசாதாரணமான சூழ்நிலையில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. யதார்த்த உணர்வை வெளிப்படுத்துவதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு, ஒட்டுமொத்த மனித குலத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் தன்னம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இன்றைய பட்ஜெட் இருக்கப் போகிறது. அதே சமயத்தில், உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் இது இருக்கும்.

இன்றைய பட்ஜெட் தற்சார்புக்கான லட்சிய நோக்கு கொண்டதாகவும், அனைத்து தரப்பினரின் ஈடுபாட்டுடன் கூடிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டதாகவும் உள்ளது. வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள், புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், மனிதவளங்களில் புதிய பரிமாணம், கட்டமைப்பு வசதியில் புதிய துறைகள், நவீனத்துவத்தை நோக்கி முன்னேறுதல், புதிய சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தல் என்ற கோட்பாடுகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் சாமானிய மக்களின் `வாழும் தன்மையை எளிதாக்கும்’ நிலையை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறையினர் மற்றும் கட்டமைப்புத் துறைகளில் ஏராளமான ஆக்கபூர்வ மாற்றங்களை இந்த பட்ஜெட் உருவாக்கும். இந்த அரும்பணிக்காக நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா அவர்கள், அவருடைய சக அமைச்சர் அனுராக் அவர்கள் மற்றும் அவர்களின் அணியினருக்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமர்ப்பித்த ஒன்றிரண்டு மணி நேரத்திற்குள் நிபுணர்களிடம் இருந்து பல நேர்மறை கருத்துகளைப் பெற்ற அபூர்வமான பட்ஜெட் உரைகளில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது. கொரோனா சூழ்நிலையில் சாமானிய குடிமக்கள் மீது அரசு சுமையை ஏற்றிவிடும் என்று பல நிபுணர்களும் ஊகித்திருந்தனர். ஆனால், நிதி ஸ்திரத்தன்மையை மனதில் கொண்டு, பட்ஜெட் அளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. பட்ஜெட் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நமது அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த பட்ஜெட்டின் வெளிப்படைத்தன்மை குறித்து பல நிபுணர்கள் பாராட்டு தெரிவித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

கொரோனா நோய் பரவலைப் பொருத்த வரை, பாதிப்புக்குப் பிந்தைய எதிர்வினை செயல்களில் ஈடுபடுவது என்பதைக் காட்டிலும், முன்கூட்டியே ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற அணுகுமுறையை இந்தியா எப்போதும் கடைபிடித்து வருகிறது. கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களாக இருந்தாலும், தற்சார்பு இந்தியா திட்டத்தில் எடுத்துக் கொண்ட உறுதியாக இருந்தாலும் இந்தியா நேர்மறையுடன் செயல்பட்டது. இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல, நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆக்கபூர்வமான பட்ஜெட் அளித்திருப்பதன் மூலம், நாட்டிற்கு நேர்மறை செயல்பாட்டின் உறுதியைத் தெரிவித்திருக்கிறோம். சொத்து உருவாக்கல் மற்றும் ஆரோக்கிய நிலையை மேம்படுத்தும் துறைகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. வாழ்க்கை இருந்தால் தான் உலகம் இருக்கும். குறிப்பாக எம்.எஸ்.எம்.இ.கள் மற்றும் கட்டமைப்பு துறைகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. சுகாதாரத் துறையில் இந்த பட்ஜெட் செலுத்தியுள்ள கவனம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமைந்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி காண்பது பற்றி இந்த பட்ஜெட் பேசுகிறது.

அதாவது, ஒட்டுமொத்த வளர்ச்சி பற்றிப் பேசுகிறது. குறிப்பாக, தெற்கு, வட-கிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கில் லே-லடாக் பிராந்தியங்களின் வளர்ச்சியில் இந்த பட்ஜெட் சிறப்பு கவனம் செலுத்தி இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தமிழ்நாடு, கேரளா, வணிக அதிகார மையமான மேற்குவங்கம் போன்ற இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பெரிய திட்டங்களுக்கு பட்ஜெட் வகை செய்கிறது. அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில், பயன்படுத்தப்படாத வளங்களை அடையாளம் காண இந்த பட்ஜெட் உதவியாக இருக்கும். ஆராய்ச்சி மற்றும் புதுமை சிந்தனை சூழலுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதால், நம் இளைஞர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க இந்தியா மிக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும்.

சுகாதாரம், கழிவறை வசதி, சத்துணவு, சுத்தமான தண்ணீர், சாமானிய மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு சம அளவு முக்கியத்துவம் அளிக்க இந்த பட்ஜெட்டில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவில் நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது குறித்தும், கட்டமைப்பு உருவாக்குவதற்கு செலவிடுதல் குறித்தும் பட்ஜெட்டில் திட்டங்கள் உள்ளன. இதனால் வளர்ச்சி அதிகரிப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். வேளாண்மைத் துறையை பலப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. அதற்காக பல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையில், விவசாயிகளுக்கு அதிக கடன் வசதி எளிதாகக் கிடைக்கும். வேளாண்மைக் கட்டமைப்பு நிதி மூலமாக நாட்டில் ஏ.பி.எம்.சி. மண்டிகளுக்கு உதவுதல் மற்றும் அதிகாரம் அளிக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கிராமங்களும் நமது விவசாயிகளும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. எம்.எஸ்.எம்.இ. துறையை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில், முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு எம்.எஸ்.எம்.இ. துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

தற்சார்பை நோக்கிய பாதையில் பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியதாக இது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தசாப்தத்தின் தொடக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்குவதாக இந்த பட்ஜெட் உள்ளது. தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான, இந்த முக்கியமான பட்ஜெட் அமைந்திருப்பது குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிதியமைச்சருக்கும், அவரது குழுவினருக்கும் மீண்டும் ஒரு முறை நான் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave your comments here...