பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா : ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கே அனுமதி

ஆன்மிகம்

பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா : ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கே அனுமதி

பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா  : ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கே அனுமதி

கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பொங்கல் திருவிழா, இந்த ஆலயத்தின் சிறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு, திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என்று பல இடங்களிலும் பெண்கள் கூடி பொங்கல் வைப்பார்கள்.

இந்த விழாவானது, பல லட்சம் பேர் அதுவும் பெண்களால் மட்டுமே வைக்கப்படும் பொங்கல் விழாவாகும். அதோடு இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததாக, இந்த கோவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அதே போல் 2009-ம் ஆண்டு 30 லட்சம் பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தது, முந்தைய சாதனையை முறியடித்தது.

இப்படி ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.ஆண்டுதோறும் இக்கோவிலில் மாசி மாதம் பொங்காலை விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா அடுத்த மாதம் பிப்ரவரி 27ந்தேதி நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் ஆரியாராஜேந்திரன், போலீஸ் கமி‌ஷனர் பல்ராம் குமார் உபாத்யா மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பொங்காலை விழாவில் பங்கேற்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி இந்த ஆண்டு பொங்காலை விழாவில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொங்கலிட அனுமதி வழங்க வேண்டும். எத்தனை நபர்களுக்கு அனுமதி வழங்குவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.பொது இடங்களில் எக் காரணம் கொண்டும் பொங்கல் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதே நேரம் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட எந்த தடையும் இல்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Leave your comments here...