உலகின் கலாச்சார தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் – மத்திய அமைச்சருடனான கலந்துரையாடலில் சத்குரு வலியுறுத்தல்

இந்தியா

உலகின் கலாச்சார தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் – மத்திய அமைச்சருடனான கலந்துரையாடலில் சத்குரு வலியுறுத்தல்

உலகின் கலாச்சார தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் – மத்திய அமைச்சருடனான கலந்துரையாடலில் சத்குரு வலியுறுத்தல்

உலகில் நிகழும் முரண்பாடுகளுக்கு இணக்கமான முறையில் தீர்வு காண நம் இந்திய தேசம் உலகின் கலாச்சார தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தினார்.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் (Indian Institute of Public Admistration – IIPA) சார்பில் ”உள்நிலை விஞ்ஞானம்: நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் நேற்று (ஜனவரி 9) நடந்த ஆன்லைன் வெபினாரில் சத்குரு இவ்வாறு கூறினார்.

இதில் மத்திய அமைச்சரும், ஐ.ஐ.பி.ஏ தலைவருமான திரு.ஜிதேந்தர் சிங், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு.எம்.என்.பண்டாரி, சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சேகர் தத், ஐ.ஐ.பி.ஏ இயக்குநர் சுரேந்திர நாத் திருப்பாத்தி, அந்நிறுவனத்தின் உதவி பேராசிரியர் டாக்டர். சுரபி பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் சத்குரு பேசியதாவது: தலைமைப் பண்பு என்பது அதிகாரத்தை பற்றியது அல்ல. அது தன்னை தியாகம் செய்வதற்கான விருப்பம் ஆகும். நீங்கள் தலைவராக இருக்கும்பட்சத்தில் உங்கள் வாழ்க்கை என்பது உங்களை பற்றியது கிடையாது. உங்களை சுற்றியுள்ள எல்லாரையும் எல்லாவற்றையும் பற்றியதாக இருக்கும். ஆகையால், அதிகாரமிக்க தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய இயல்பான தன்மையிலேயே ஆனந்தமான நிலையை பெறுவது மிகவும் முக்கியம். காரணம், ஒருவர் உள்நிலையில் எந்த மாதிரியான தன்மையில் இருக்கிறாரோ, அந்த தன்மையை தான் அவர் மற்றவர்களிடம் வெளிப்படுத்துவார். இது மனிதர்களின் இயல்பாகும். ஆகையால், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் ஆனந்தத்தை பகிரும் தன்மையை பெற்று இருக்க வேண்டும்.

இதற்காகவே, ஈஷா அறக்கட்டளை சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு இன்னர் இன்ஜினியரிங் என்ற யோகா வகுப்புகளை கற்றுக்கொடுத்து வருகிறோம். Department of Personnel and Training (DoPT) திட்டத்தின் மூலம் இதுவரை 413 அதிகாரிகளுக்கு யோகா பயிற்சி அளித்துள்ளோம். இதுதவிர, ஏராளமான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.

நம் இந்தியாவில் ஒருங்கிணைப்பட்ட மதம் என்ற ஒன்றோ, முட்டாள்தனமாக அனைத்தையும் நம்பும் முறைகளோ கிடையாது. எல்லாவற்றையும் தேடி உணரும் ஆன்மீகமுறையில் வந்தவர்கள் நாம். இந்தியா என்பது கடவுள்கள் அற்ற ஒரு தேசம். மக்கள் இன்று யாரை கடவுளாக வணங்குகிறார்களோ, அவர்களே நேரில் வந்த போது அவர்களிடம் கேள்விகளையும் விவாதங்களையுமே முன் வைத்தோம். அவர்களும் நமக்கு எவ்வித கட்டளைகளையும் வழங்கியது கிடையாது. உள்நிலை தேடல் மட்டுமே நம் இயல்பாக இருக்கிறது.

அனைத்து உயிர்களையும் சமமாக பார்க்கும் நம்முடைய இந்திய கலாச்சாரம் எதிர்கால உலகிற்கான ஒரு முன்மாதிரியாக மாற வேண்டும். அதற்கு இந்தியா உலகின் கலாச்சார தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். அவ்வாறு நிகழும் போது உலகில் நிகழும் முரண்பாடுகளை நம்மால் எளிதில் களைய முடியும். இவ்வாறு சத்குரு பேசினார்.


மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசுகையில், “கைகளை சுத்தம் செய்தல், இருகரம் கூப்பி வணங்குதல் போன்ற இந்திய பாரம்பரிய முறைகளை கொரோனா நமக்கு மீட்டு தந்துள்ளது. சுகாதாரத்திற்கு நாட்டின் முதன்மை உரிமை வழங்கப்பட வேண்டும். சமூக இடைவெளி, தூய்மை, யோகா, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வை இது உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய ஆன்மீகத்திற்கான உலகளவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது” என்றார்.

Leave your comments here...