சாதாரண மக்களின் அவசியத் தேவைகளை அறிவியல் நிவர்த்தி செய்ய வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர்

இந்தியா

சாதாரண மக்களின் அவசியத் தேவைகளை அறிவியல் நிவர்த்தி செய்ய வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர்

சாதாரண மக்களின் அவசியத் தேவைகளை அறிவியல் நிவர்த்தி செய்ய வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர்

சாதாரண மக்களின் அவசியத் தேவைகளை அறிவியல் நிவர்த்தி செய்ய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஐதராபாத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய வெங்கையா நாயுடு கூறியதாவது:

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியை வெளியிடும் தருவாயில் இந்தியா உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சாத்தியமாக்கிய விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகள். தனி நபர் முழுக் கவச உடைகள், கோவிட்-19 பரிசோதனை உபகரணங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக்கள். தொற்று பரவிய காலத்தில், இந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் திறன் நம் நாட்டில் குறைவாக இருந்தது. ஆனால் குறைந்த காலத்தில், நாம் இவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறினோம்.

கொரோனா வைரஸ், சிகிச்சை மற்றும் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்கள் மக்கள் இடையே பீதியை ஏற்படுத்துகின்றன. விவேகமாக சிந்திக்கும் மக்கள் இது போன்ற பொய்த் தகவல்களை நம்ப கூடாது. மனித முன்னேற்றத்துக்கான உயிர்நாடியாக அறிவியல் உள்ளது. அறிவியல் மனநிலையை வளர்ப்பது நமது அடிப்படைக் கடமைகளில் ஒன்று என நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனநிலையை நாம் பயன்படுத்தினால், வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தலாம். தகவலறிந்த பின் முடிவுகளை எடுக்கலாம்.

இந்தியாவின் அடிப்படைத் தத்துவமே, அடுத்தவரின் நலனுக்காகப் பகிர்ந்து கொள்வதாக உள்ளது. புகழ்பெற்ற விஞ்ஞானி ஜே.சி.போஸ், பலவற்றைக் கண்டுபிடித்தாலும், ஒரு பொருளுக்குக் கூட அவர் காப்புரிமை கோரவில்லை. அதே உணர்வுடன் தான் உலகத்தின் மருந்தகமாக நாம் மாறியுள்ளோம். உயிர் காக்கும் மருந்துகள் பலவற்றை வளரும் நாடுகளுடன் நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். அறிவியலில் நமது சொந்த வரலாறை இந்தியர் பலர் அறியாமல் உள்ளனர். நமது அறிவியல் சாதனைகளைக் கொண்டாட வேண்டும். அறிவியல் துறையை குழந்தைகள் தேர்ந்தெடுக்க நாம் ஊக்குவிக்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக ஆக்க வேண்டும். அறிவியல் கல்வியை ஊக்குவித்து, அறிவியல் மனநிலையை இளம் வயதில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் கேள்வி எழுப்புவதையும், விவேகமாக சிந்திப்பதையும் நாம் ஊக்குவித்தால், அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

அறிவியல் திருவிழாவில் பொம்மைகளையும், விளையாட்டையும் சேர்த்தது மகிழ்ச்சி. மாணவர்களின் படைப்பாற்றலை இது தூண்டுகிறது. இவற்றில் அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பெருந்தொற்றில் நாம் கற்ற முக்கியமான பாடம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாம் முதலீடு செய்து தற்சார்புடையதாக மாற வேண்டும் என்பது தான். தற்சார்பை எப்படி அடைய முடியும் என்பதற்கு நமது விண்வெளித்துறை தான் உதாரணம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் புதுமைகளை உருவாக்க பல அமைப்புகளுடன் தனியார் துறையும் இணைய வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சாதாரண மக்களின் முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் அறிவியல் மாற்ற வேண்டும்.இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.

Leave your comments here...