தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அரசியல்இந்தியா

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழ்நாட்டின் துரிதமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், ரூ 70,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் ரூ 380 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்த அமித் ஷா இவ்வாறு கூறினார்.ரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள், மறைந்த திரு எம் ஜி ராமச்சந்திரன் மற்றும் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்திய திரு அமித் ஷா, இத்தலைவர்களின் பாதையில் தமிழ்நாட்டை வளர்ச்சியை நோக்கி முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி வழிநடத்திச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இவ்விழாவில் முதல்வர்பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, தொன்மையான மற்றும் வளமான கலாச்சாரம், அறிவியல் திறன், கட்டிடக்கலை திறமை மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்கு ஆகியவற்றுக்காக தமிழ்நாட்டை தாம் வணங்குவதாகக் குறிப்பிட்டார்.

முதல்வர் பழனிசாமியின் தலைமையின் கீழ் தமிழகம் வேகமாக வளர்ச்சியடைந்து இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும் என்னும் நம்பிக்கை தமக்கிருப்பதாக அமித் ஷா கூறினார். “தமிழகத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளில் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். அனைத்து ஆதரவையும் நாங்கள் வழங்குவோம். தமிழகத்தின் துரித வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதியை நான் மீண்டுமொருமுறை அளிக்கிறேன்,” என்றார்.

சாகர்மாலா திட்டத்தைப் பற்றி பேசிய அவர், துறைமுகங்கள் மற்றும் சாலைகளின் மேம்பாட்டுக்காக ரூ 2,25,000 கோடியை மத்திய அரசு வழங்கியிருப்பதாகக் கூறினார், மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ள நிதி விவரங்களை அவர் பட்டியலிட்டார்.

மதுரையில் ரூ 1,264 கோடி செலவில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதை திரு அமித் ஷா நினைவு கூர்ந்தார். கோவிட்டுக்கு எதிராக போரிடுவதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை விவரித்த அவர், மோடி அரசின் வலுவான செயல்பாடுகளின் மூலமாக கொரோனா பெருந்தொற்றை நம்மால் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்திருக்கிறதென்றும், உலகிலேயே கோவிட்டை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் கூறினார். மத்திய, மாநில அரசுகள் மற்றும் 130 கோடி மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதால் தான் இது சாத்தியமாகியுள்ளது என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, கோவிட்டை எதிர்த்து சிறப்பாக போராடும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். “92 சதவீத குணமடைதல் விகிதத்துடன், சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது,” என்று அவர் கூறினார்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சியின் பத்து வருட காலத்தில் வெறும் ரூ 60,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஆனால் மோடி தலைமையிலான அரசோ, மூன்றே ஆண்டுகளில், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ 95,000 கோடியை நேரடியாக செலுத்தியிருப்பதாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார்.

இதில், தமிழகத்தில் மட்டும், 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ 4,400 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த அவர் மேலும், ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் நபார்டு மூலம் பல்வேறு திட்டங்களூக்கு ரூ 1,20,000 கோடியை வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், சிறு அளவிலான உணவு நிறுவனங்களுக்கும் வழங்கியிருக்கிறோம் என்று கூறினார்.

நீலப் புரட்சியைப் பற்றி பேசிய அவர், இதற்காக ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு ரூ 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், நாட்டின் மிகப்பெரிய மீன் ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாடு, மேற்கண்ட திட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் முதலிடத்துக்கு வர வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் கூறினார்.

சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலிலும், நீர் மேலாண்மை திட்டங்களிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாகவும், தமிழகத்துக்கு உரிய இடத்தையும், அதிகாரத்தையும் மத்திய அரசு வழங்கிக் கொண்டிருப்பதாகவும் திரு அமித் ஷா கூறினார்.

மத்திய அரசின் சமீபத்திய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு ஆதரவளித்ததற்காக தமிழகத்துக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த சட்டங்களின் மூலம் தமிழக விவசாயிகள் பெரிய அளவில் பயனடைவார்கள் என்று கூறினார்.

கிழக்கு கடற்கரை சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ 13,700 கோடியை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும், கிராமப்புற குடும்பங்களுக்கு சுத்தமான குடி நீரை வழங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்குவதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது லட்சம் கிராமப்புற குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் இது வரை குடி நீர் இணைப்புகளை பெற்றிருப்பதாகக் கூறிய அமைச்சர், அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான நீர் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்குப் போதுமான நிதியை ஒதுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.


இந்தியாவிலேயே இரண்டு மாநிலங்களில் தான் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் தமிழ்நாடும் ஒன்று என்றும் அவர் எடுத்துரைத்தார். ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சாதியை வைத்து அரசியல் செய்வது ஆகியவற்றை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறிய அமித் ஷா, ஜனநாயகக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்றார்.

பிரதமர் மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தமிழக மீனவர்கள் மீது தற்போது தாக்குதல்கள் எதுவும் நடைபெறுவது இல்லை என்று கூறிய உள்துறை அமைச்சர், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டவும், கோயில்களின் புனரமைப்புக்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழக அரசின் தலைமை செயலாளர் கே சண்முகம் அனைவரையும் வரவேற்றார். தொழில்துறை முதன்மை செயலாளர் என் முருகானந்தம் நன்றியுரை ஆற்றினார்.

Leave your comments here...