மாமல்லபுரத்தில் மோடி எழுதிய கவிதை- தமிழில் வெளியீடு..!

அரசியல்

மாமல்லபுரத்தில் மோடி எழுதிய கவிதை- தமிழில் வெளியீடு..!

மாமல்லபுரத்தில் மோடி எழுதிய கவிதை- தமிழில் வெளியீடு..!

பிரதமர் மோடி, மாமல்லபுரம் கடற்கரையோரம் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது எழுதிய “அலைகடலே அடியேனின் வணக்கம் “ என்ற கவிதை, தற்போது பிரதமரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது

அந்த கவிதையில்..

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

அளப்பரிய, முடிவற்ற,
ஒப்பில்லாத, வர்ணனைகளைக்
கடந்த, நீலக்கடலே
உலகிற்கு உயிரளிக்கும் நீ
பொறுமையின் இலக்கணம்
ஆழத்தின் உறைவிடம்.

அலைகடலே!
அடியேனின் வணக்கம்.

வெளித்தோற்றத்திற்கு
கோபமாய், வீரத்துடன்
பேரிரைச்சலோடு எழும் அலைகள்
உன் வலியா? வேதனையா?
துயரமா? எதன் வெளிப்பாடு?
இருந்தபோதிலும் உன்னை
கலக்கமின்றி, தடுமாற்றமின்றி
உறுதியுடன் நிற்கச் செய்கிறது
உன் ஆழம்.

அலைகடலே!
அடியேனின் வணக்கம்.

உன்னிடம் உள்ளது
எல்லையில்லாத வலிமை,
முடிவில்லாத சக்தி ஆனாலும்
பணிதலின் பெருமையை
நிமிடந்தோறும் நவில்கிறாய் – நீ
கரையைக் கடக்காமல்
கண்ணியத்தை இழக்காமல்

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

கல்வித் தந்தையாய்
ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை
போதிக்கிறாய் நீ
புகழுக்கு ஏங்காத,
புகலிடத்தை நாடாத
பலனை எதிர்நோக்காத
உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்.

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

நிற்காமல், சளைக்காமல்
வீசும் உன் பேரலைகள்
முன்னேறுவதே வாழ்க்கை என்ற
உபதேச மந்திரத்தை உணர்த்தும்
முடிவில்லாத பயணமே
முழுமையான உன் போதனை.

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

விழும் அலைகளிலிருந்து
மீண்டும் எழும் அலைகள்
மறைந்து
மீண்டும் துவங்கும் உதயம்
பிறப்பு – இறப்பு என்பது தொடர் வட்டம்
உனக்குள் மடிந்து – பின்
உயிர்த்தெழும் அலைகள்
மறுபிறப்பின்
உணர்வூட்டம்

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

பழம்பெரும் உறவான
சூரியனால் புடமிட்ட
தன்னை அழித்து,
விண்ணைத் தொட்டு
கதிரவனை முத்தமிட்டு
மழையாய்ப் பொழிந்து

நீர்நிலைகள், சோலைகளாய்
மகிழ்ச்சி மணம் பரப்பி
படைப்பை அலங்கரித்து – எல்லோருக்கும்
வாழ்வளிக்கும் நீர் நீ

அலைகடலே!
அடியேனின் வணக்கம்

வாழ்வின் பேரழகு நீ –
விஷத்தை அடக்கிய
நீலகண்டன் போல் – நீயும்
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு
புது வாழ்வைப்
பிறர்க்களித்து
சொல்கிறாய்
சிறந்த வாழ்வின்
மறைபொருள்.

அலைகடலே
அடியேனின் வணக்கம்

என அந்தக் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்

Comments are closed.