சரக்கு மற்றும் சேவை வரியில் ரூபாய் 35 கோடி மதிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவர் கைது.!

இந்தியா

சரக்கு மற்றும் சேவை வரியில் ரூபாய் 35 கோடி மதிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவர் கைது.!

சரக்கு மற்றும் சேவை வரியில் ரூபாய் 35 கோடி மதிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவர் கைது.!

ரூபாய் 35.72 கோடி மதிப்பில் சரக்கு மற்றும் சேவை வரி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரை சென்னை புறநகர் சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது செய்துள்ளனர்.

விரிவான விசாரணை மற்றும் 50 இடங்களில் நடத்திய சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் எழும்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்களின் அடிப்படையில் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி சம்பந்தமான மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து கடனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் எந்தப் பொருளோ அல்லது சேவையோ வழங்காமல், இந்தப் போலி நிறுவனங்கள் பல்வேறு வர்த்தக அமைப்புகளுக்கு வரி விலைப்பட்டியலை வழங்கியுள்ளன.

இந்த நிலையில் ரூபாய் 401 கோடி விலைப்பட்டியலுக்கு ரூபாய் 35.72 கோடி மோசடியில் கைது செய்யப்பட்டவர்களும் அவர்களது கூட்டாளிகளும் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியின் மூலம் பயனடைந்த வர்த்தக அமைப்புகளையும் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

நேர்மையான மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் வரி செலுத்துதல் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரித்துறை, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களை வழங்க மக்கள் முன்வருமாறு கேட்டுக் கொண்டு, அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி குறித்த அனைத்து சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு, அண்ணாநகரில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் துறையை 26142850, 26142851, 26142852, 26142853 ஆகிய எண்களிலோ, அல்லது Sevakendra-outer-tn@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவல், சென்னை புறநகர் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையர் அலுவலகத்தின் முதன்மை ஆணையர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...