சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தம் : கிப்ட் பாக்ஸ்கள் விற்பனை கடுமையாக சரிவு

சமூக நலன்தமிழகம்

சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தம் : கிப்ட் பாக்ஸ்கள் விற்பனை கடுமையாக சரிவு

சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தம் : கிப்ட் பாக்ஸ்கள் விற்பனை கடுமையாக சரிவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தீபாவளி பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளது. கிப்ட் பாக்ஸ்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, பட்டாசு விற்பனையாளர்கள் கூறினர்.


தீபாவளி பண்டிகைக்காக சிவகாசி, சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, வெளி மாவட்டங்களிலிருந்து சிவகாசி பகுதிகளுக்கு பட்டாசுகள் வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு கடந்த இரண்டு நாட்களாகத்தான், ஓரளவு வெளி மாவட்ட மக்கள் பட்டாசுகள் வாங்குவதற்காக வரத்துவங்கியுள்ளனர். தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் பட்டாசுக்கடைகளில் கிப்ட் பாகஸ்கள் வியாபாரம் களைகட்டும். உறவினர்கள், நண்பர்கள், தங்கள் பணியாளர்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வாங்கி, தீபாவளி பரிசாக கொடுப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் முடங்கியுள்ளது. இது பட்டாசு விற்பனையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பட்டாசுக்கடை உரிமையாளர் நந்தபாலன் கூறும்போது:- வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய வாரம் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சிறு தொழில்கள் செய்பவர்கள் பட்டாசுகள் வாங்குவதற்கு வருவார்கள். மேலும் தங்களது பணியாளர்களுக்கு கொடுப்பதற்காக கிப்ட் பாக்ஸ்களை மொத்தம் மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டு மொத்தமாக கிப்ட் பாக்ஸகள் வாங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

மேலும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் பணம் பாதியாக குறைந்துள்ளதும், பட்டாசு விற்பனையில் மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆண்டு பட்டாசுகள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது என்பது தான் உண்மையான நிலை என்று கூறினார்.

Leave your comments here...