வேளாண் மசோதா : எதிர்க்கட்சி தலைவரைப் போல் விவசாயத்தைப் பற்றியோ, விவசாயிகளின் நலனைப் பற்றியோ நான் அறியாதவன் அல்ல : ஸ்டாலினுக்கு முதல்வர் கண்டனம்

அரசியல்

வேளாண் மசோதா : எதிர்க்கட்சி தலைவரைப் போல் விவசாயத்தைப் பற்றியோ, விவசாயிகளின் நலனைப் பற்றியோ நான் அறியாதவன் அல்ல : ஸ்டாலினுக்கு முதல்வர் கண்டனம்

வேளாண் மசோதா : எதிர்க்கட்சி தலைவரைப் போல் விவசாயத்தைப் பற்றியோ, விவசாயிகளின் நலனைப் பற்றியோ நான் அறியாதவன் அல்ல :  ஸ்டாலினுக்கு  முதல்வர்  கண்டனம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை, திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம் மற்றும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை, தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என்றும், இவை விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்கள் என்றும், இவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும், இச்சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 18.9.2020 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், இச்சட்டங்கள் வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும், உழவர் சந்தை திட்டத்திற்கும் எதிரானது என்றும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இதில் இல்லையென்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

மத்திய அரசால், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் அவசர சட்டம்-2020, விவசாயிகள் விளைபொருட் கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் அவசர சட்டம்-2020, அத்தியவசிய பொருட்கள் அவசர திருத்தச் சட்டம்-2020 ஆகிய சட்டங்கள் 5.6.2020 அன்று அவசர சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு இச்சட்டங்கள் மக்களவையில் முன்மொழியப்பட்டு, கடந்த 15.9.2020 மற்றும் 17.9.2020 ஆகிய தேதிகளில் இச்சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோகோ, கரும்பு சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் ஒப்பந்த முறை ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற முறைகளை ஒழுங்குபடுத்த தற்போது கொண்டு வரப்பட்ட விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்துக்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2020 ஒப்பந்த சாகுபடி முறையை ஒழுங்குபடுத்த உதவும். ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இச்சட்டத்தில், விவசாயிகளை கட்டாயப்படுத்தவோ அல்லது பாதிக்கும் வகையிலோ உள்ள அம்சங்கள் எதுவும் இல்லை.வேளாண் வணிக நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பண்ணை சேவைகள் மற்றும் விளைபொருட்கள் கொள்முதலுக்காக விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதன்மூலம், விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்படாமல், ஒப்பந்த விலை மூலம் உறுதியான வருவாய் கிடைக்கும்

ஒப்புக்கொள்ளப்பட்ட விலை கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், விவசாயிகள், விலைவீழ்ச்சி போன்ற பாதிப்புகளில் இருந்து காப்பாற்றப்படுவதோடு, கொள்முதலாளர்களும் குறிப்பிட்ட தரம் மற்றும் அளவிலான வேளாண் விளைபொருட்களை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.இதன் மூலம், விவசாயிகள் மற்றும் கொள்முதல் செய்வோர் இருவர் நலனும் பாதுகாக்கப்படும். விவசாயிகள் அவர்களுக்குரிய பயன்களை உறுதியாக பெறுவதோடு, உணவு பதப்படுத்துதலுக்கு தேவையான தரமான விவசாய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்து, இதுபோன்ற தொழில்களும் கிராமப்பகுதிகளில் பெருகி வேலைவாய்ப்பு ஏற்படும்.

மேலும், ஏற்கனவே உள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த வேளாண் விற்பனை மைய கட்டமைப்புகளையும் மேம்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். தமிழ்நாட்டில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் இரண்டாம் திருத்தச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இடைத்தரகர்கள் என்ற நிலை இல்லை. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு போட்டி முறையில் நல்ல விலையைப் பெறுவது உறுதி செய்யப்படும்.

இச்சட்டத்தில் வணிகப்பகுதி என்ற புதிய அணுகுமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வியாபாரம் செய்பவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் இச்சட்டத்தின்படி வசூலிக்கப்படமாட்டாது. விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் நிரந்தர கணக்கு எண் மட்டும் இருந்தால் போதுமானதாகும். எதிர்க்கட்சி தலைவர் சொல்வது போல் விவசாயிகளுக்கு நிரந்தர கணக்கு எண் தேவையில்லை. இச்சட்டம் எவ்விதத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்குள் நடைபெறும் வணிக செயல்பாடுகளை பாதிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது குறைந்தபட்ச ஆதாரவிலையில் நடைபெறும் கொள்முதலும் பாதிக்காது. கார்ப்பரேட் நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதற்கு வழிவகுக்கும் என்ற கூற்றில் துளியும் உண்மையில்லை.

இச்சட்டங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்துள்ளதால், இதன் மூலம் நமது தமிழக வேளாண் பெருமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற அடிப்படையிலும், மாறாக வேளாண் விளைபொருட்களை நல்லவிலையில், எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரத்தை அளிக்கும் என்ற அடிப்படையிலும், தமிழ்நாடு அரசு இந்த சட்டங்களை விவசாயிகளின் நலன் கருதி எதிர்க்கவில்லை. இதனால் தற்போது குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்காது. விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 2020, உழவர் சந்தைத் திட்டத்திற்கு எதிரானது என்ற கூற்று முற்றிலும் தவறானது. இச்சட்டத்தின் பகுதி ஒன்று (எம்-2) பிரிவின் படி, உழவர் நுகர்வோர் சந்தைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதால், அவை தொடர்ந்து இயங்குவதற்கு தடையேதும் இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதைப் போல் அல்லாமல், இச்சட்டங்களில் உழவர் சந்தைத் திட்டத்திற்கும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் வழிவகை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், உணவு பொருட்களை நிறுவனங்கள் பதுக்குவதை தடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காகவும், இருப்பில் வைப்பதற்காகவும், விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டில் தொடரும் என்பதால், விவசாயிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தற்போது மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சட்டங்களினால், தமிழ்நாட்டில் உள்ள விவசாய பெருமக்களுக்கு எதிர்பாராத விலை வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, அவர்களுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும் என்பதனை விவசாயி ஆகிய நான் நன்கு உணர்ந்ததால்தான், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது.எதிர்க்கட்சி தலைவரைப் போல் விவசாயத்தைப் பற்றியோ, விவசாயிகளின் நலனைப் பற்றியோ நான் அறியாதவன் அல்ல. விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். எனவே, யாரோ எழுதி கொடுத்ததை வைத்து விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டு உள்ளார். இவர் எப்போதுமே அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பதைத்தான் தனது வாடிக்கையாக கொண்டு உள்ளார்.

ஆகவே, ஒருமுறை அல்ல, ஓராயிரம் முறை நான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். விவசாயிகளின் நலனை காக்க, அனைத்துவிதமான உறுதியான நடவடிக்கைகளையும் இந்த அரசு தொடர்ந்து எடுக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் இபிஎஸ் கூறியுள்ளார்.

Leave your comments here...