மூலிகை பெட்ரோல் விற்பனை : கேரளத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ராமர் பிள்ளை

தமிழகம்

மூலிகை பெட்ரோல் விற்பனை : கேரளத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ராமர் பிள்ளை

மூலிகை பெட்ரோல் விற்பனை : கேரளத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ராமர் பிள்ளை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்பிள்ளை. கடந்த 1994ம் ஆண்டு இவர் தயாரித்து வெளியிட்ட மூலிகை பெட்ரோல் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மூலிகை பெட்ரோல் அல்ல என்று சிபிஐ கடந்த 2000ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தது. அண்மையில் இந்த வழக்கு ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கம்யூனிட்டி கிரீன் இண்டஸ்ட்ரீயல் பார்க் டிரேடிங் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்த டிகோ பையோ ப்யூல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலம் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய ராமர்பிள்ளை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதுகுறித்து,இராஜபாளையத்தில் ராமர்பிள்ளை அளித்த பேட்டியில்:- 26 ஆண்டுகால போராட்டத்திற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. மூலிகை பெட்ரோல் தயாரிப்பு முறைகள் குறித்து கேரளத்தில் இயங்கி வரும் டிகோ பையோ ப்யூல் இண்டஸ்ட்ரீஸ் அறிந்து விளக்கம் கேட்டது. மூலிகை பெட்ரோல் தயாரிப்பு முறைகளை செய்துகாட்டியதில் அவர்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டது. இந்நிறுவனம் கேரள அரசு ஒப்புதல் பெற்று 77 இடங்களில் இயங்கி வருகிறது.

நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் பார்முலாவை இந்நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டேன். இனிமேல் இந்நிறுவனமே மூலிகை பெட்ரோலை தயாரிக்கும். மேலும், ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் இந்நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதோடு, மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான மூலிகையை பயிரிட 1,200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 18ம்தேதி உற்பத்தி தொடங்கப்படும். முதல்கட்டமாக 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் எனது மேற்பார்வையில் விற்பனை செய்யப்படும். மேலும், இந்திய ராணுவத்திற்காக 100 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.5க்கு விற்பனை செய்ய உள்ளேன். இதற்கான ஏற்பாடும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கன்னியாகுமரியில் மாவட்டத்தில் உள்ள நூல்முகமது பல்கலைக்கழகமும் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மூலிகை பெட்ரோலுக்கு “தமிழ்தேவி மூலிகை எரிபொருள்” என பெயரிட்டுள்ளதாகவும், ஒரு லிட்டர் ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்றும் ராமர்பிள்ளை தெரிவித்தார்.

ஆனால் கம்யூனிட்டி கிரீன் இண்டஸ்ட்ரீயல் பார்க் டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக துணை இயக்குநர் சற்குணராஜ்ராஜதுரை கூறுகையில், 17 மாநிலங்களைச் சேர்ந்த 10,700 பங்குதாரர்களைக்கொண்டு 1,600 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர் வரை உற்பத்தி செய்ய முடியும். கிரீன் அங்காடிகள் மூலம் மூலிகை பெட்ரோல் வரி உட்பட 39 ரூபாய்க்கு 18ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்றார்.

Leave your comments here...