சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி : 5 மாதங்கள் கழித்து அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி…!

ஆன்மிகம்

சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி : 5 மாதங்கள் கழித்து அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி…!

சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி : 5 மாதங்கள் கழித்து அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி…!

விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பிரசித்தி பெற்ற, சதுரகிரி மகாலிங்கமலைக்கு ஐந்து மாதங்களுக்குப்பின் நாளை, பக்தர்கள் பொதுமக்கள் மலை மீது செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளது சதுரகிரி மகாலிங்கமலை. மலைமீதுள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளை தரிசிக்க ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி காலங்களில் தலா இரண்டு நாட்களும் மட்டுமே பக்தர்கள், பொதுமக்கள் மலைமீது செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வந்தனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மகாலிங்கமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் வருவார்கள்.

விருதுநகர், மதுரை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மகாலிங்கமலைக்கு, வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க அரசு உத்தரவிட்டது. இதனால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் கடந்த அமாவாசை தினத்தில், மகாலிங்கமலை அடிவாரப் பகுதிக்கு திரளாக வந்தனர். ஆனால் கோவில்கள் திறக்க அரசு அனுமதி வழங்காததால், பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று கோவில்களை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளதால், சதுரகிரி மகாலிங்கமலைக் கோவிலிலும் தரிசனத்திற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நாளை ஆவணி மாத பௌர்ணமி நாள் என்பதாலும், மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்து இயங்குவதாலும் சதுரகிரி மகாலிங்கமலைக்கு ஏராளமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர். மேலும் சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும், முககவசம் அணியாமல் வருபவர்கள் மலை மீது செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் அறநிலையத்துறை, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...