குற்ற சம்பவங்களை தடுக்க 150 கண்காணிப்பு கேமராக்கள்- நாகர்கோவில்.!
- October 4, 2019
- jananesan
- : 765
நாகர்கோவிலில் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் குற்ற சம்பவங்களில் துப்பு துலக்க கண்காணிப்பு கேமராக்கள் பெருமளவில் உதவிகரமாக இருந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி குமரி மாவட்ட காவல்துறையும், நாகர்கோவில் மாநகராட்சியும் இணைந்து மாநகரின் 41 முக்கிய சந்திப்புகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வந்தது. நவீன முறையில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது கட்டுப்பாட்டு அறை.குறிப்பாக அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம், மணிமேடை சந்திப்பு, கோட்டார் சந்திப்பு, கோட்டார் பஜார், பீச்ரோடு சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ராமன்புதூர் சந்திப்பு, புன்னைநகர் சந்திப்பு, கோணம், டதி பள்ளி சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, மத்தியாஸ் வார்டு சந்திப்பு, பார்வதிபுரம் சந்திப்பு என முக்கிய பகுதிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் 4–வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தெரியும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனுக்குடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் 150 கண்காணிப்பு கேமராக்களுக்கான நகர கட்டுப்பாட்டு அறையின் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே ரிப்பன் வெட்டி கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட வன அதிகாரி ஆனந்த், கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், உதவி சூப்பிரண்டு ஜவகர், துணை சூப்பிரண்டுகள் கணேசன், மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியம்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.