சாத்தையாறு அணை சீரமைக்கப்படுமா..? பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்த சிறப்பு தொகுப்பு.!

சமூக நலன்தமிழகம்

சாத்தையாறு அணை சீரமைக்கப்படுமா..? பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்த சிறப்பு தொகுப்பு.!

சாத்தையாறு அணை சீரமைக்கப்படுமா..? பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்த சிறப்பு தொகுப்பு.!

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே நீர்த்தேக்கமான சாத்தையாறு அணை தண்ணீரின்றி வறண்டும் ஆக்கிரமிப்புகளால் சிதைந்தும் காணப்படுகிறது. தமிழக அரசு சீரமைக்க முன்வருமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு:- மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அமைந்துள்ளது சாத்தையாறு நீர்த்தேக்கம். சிறுமலையிலிருந்து தோன்றி வைகையில் கலக்கும் துணை ஆறுகளில் ஒன்றான சாத்தையாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது அந்த அணை அதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

சிறுமலை வகுத்து மலை காட்டுநாயக்கன் ஓடை ஆகிய பகுதியில் இருந்து வரும் தண்ணீர் சாத்தையாறு அணை யில் சேகரிக்கப்படுகிறது. இந்த அணையின் உயரம் 29 அடி. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி சற்றேறக்குறைய 400 ஹெக்டேராகும். பாலமேடு அலங்காநல்லூர் இப்பகுதிகளை சுற்றியுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும் மதுரையின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த 1965ஆம் ஆண்டு சாத்தையாறு அணை கட்டப்பட்டது.

இதுகுறித்து கீழ சின்னனம்பட்டி ஊராட்சித் தலைவர் இரமேஷன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ள ஒரே அணை இதுவாகும். சிறுமலை பகுதியில் மழை பெய்தால் அடுத்த ஓரிரு நாட்களில் இந்த அணை நிரம்பிவிடும். இந்த அணையில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீர், அணையின் கீழே இருக்கின்ற கீழ சின்னனம்பட்டி எர்ரம்பட்டி சுக்காம்பட்டி அழகாபுரி கோவில்பட்டி ஐயூர் குறவன் குளம் முடுவார்பட்டி ஆதனூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.இந்த கண்மாய்கள் நிரம்பி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.மிகவும் செல்வம் கொழித்த இந்த பகுதி தற்போது தண்ணீர் இல்லாமல் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.விளை நிலங்களை அதிக விலைக்கு விற்க முடியாமல் செங்கல்களை வாசல்களுக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என்கிறார்.

இந்தப் பகுதியை சுற்றி ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செங்கல் சூளைகளால் வனவளம் பாதிக்கப்படுவதாக மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது. கடைசியாக கடந்த வர்தா புயலின்போது அணையின் நீர்மட்டம் பாதி அளவிற்கேனும் உயர்ந்தது. ஆனால் தற்போது சுத்தமாய் தண்ணீர் வரத்து நின்று விட்டது என்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள். இதற்கு காரணம் அணையின் மேற்புறம் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்ட நீர் மேலாண்மை குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள சிபி ரவி கூறுகையில், மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக சாத்தையாறு அணை பெருமளவு பயன்படுகிறதுஅதனை இன்னும் கூடுதலாகி முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் முல்லைப் பெரியாறு வைகை அணையை மட்டுமே நம்பாமல் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற இந்த அணையை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்கிறார்.மதுரையின் நிலத்தடி நீருக்கு பெரும் பங்காற்றுகின்ற வண்டியூர் கண்மாய் மாடக்குளம் கண்மாய் தென்கால் கண்மாய்களைப் போன்ற சாத்தையாறு அணையும் மிக முக்கியமான ஒன்றாகும். பல்லுயிர் சூழல் மிகுந்த சாத்தையாறு அணை பல்வேறு உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஆகவும் திகழ்கிறது.

சமூக ஆர்வலர் துரை விஜய பாண்டியன் கூறுகையில், இந்த அணையை சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் பல்வேறு வகையான குரங்கினங்கள், காட்டெருமைகள், காட்டு பன்றிகள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன அவை அனைத்துமே தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தால் அணைக்கு தண்ணீர் தேடி வந்து இங்கேயே உயிர் துறக்கும் அவல நிலையும் உள்ளது. ஆகையால் சாத்தியார் அணையை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும் என்கிறார்

ஏறக்குறைய நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் சாத்தையாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையை சேர் அமைப்பதற்கான பணியை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு துவங்கினால் சுற்றில் உள்ள அனைத்து கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, மதுரையின் குடிநீர் தேவைக்கான நிரந்தர தீர்வும் எட்டுவதற்கு வாய்ப்பு உண்டு..

Leave your comments here...