தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட 67 பால் பொருட்களின் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந் புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்), பால் மட்டுமின்றி நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூர்பா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவு மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, சில பால் உபபொருட்களின் விற்பனை விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் 67 பொருட்களின் புதிய அதிகபட்ச சில்லரை விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய விலைப் பட்டியலின்படி, ஆவின் நெய் பாட்டிலின் ஒரு லிட்டர் விலை ரூ.780 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 மில்லி நெய் பாட்டிலின் விலை ரூ.400; 200 மில்லி பாட்டிலின் விலை ரூ.180; 100 மில்லி பாட்டிலின் விலை ரூ.95 ஆகும். அதே நேரத்தில், அட்டைப்பெட்டியில் விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.770 என தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 கிராம் வெண்ணெயின் விலை ரூ.320 ஆகவும், மற்றொரு வகை 500 கிராம் வெண்ணெயின் விலை ரூ.325 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 கிராம் வெண்ணெயின் விலை ரூ.70 ஆகும்.
தீபாவளி பண்டிகையின்போது அதிகம் வாங்கப்படும் இனிப்பு வகைகளிலும் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 250 கிராம் குலோப் ஜாமுன் ரூ.115, 200 கிராம் ரசகுல்லா ரூ.95, 250 கிராம் பால்கோவா ரூ.150, 250 கிராம் மைசூர்பா ரூ.160 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 250 கிராம் பிரீமியம் மில்க் கேக் ரூ.140, 500 கிராம் மைசூர்பா ரூ.310, 250 கிராம் நெய் அல்வா ரூ.125, 250 கிராம் நட்ஸ் அல்வா ரூ.200, 250 கிராம் நெய் பாதுஷா ரூ.205 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 250 கிராம் முந்திரி பிஸ்தா ரோல் ரூ.340, முந்திரி கத்லி ரூ.280, 250 கிராம் கலவை இனிப்புகள் ரூ.240, 500 கிராம் கலவை இனிப்புகள் ரூ.475, 250 கிராம் கோவா ரூ.150 எனப் புதிய விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவின் தயிர் மற்றும் பானங்களின் விலைகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 500 மில்லி தயிர் ரூ.40, ஒரு கிலோ சாதாரண தயிர் ரூ.70, ஒரு கிலோ பிரீமியம் தயிர் ரூ.130 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 மில்லி மோர் ரூ.10, பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்யப்படும் 200 மில்லி மோர் ரூ.14, 200 மில்லி லஸ்ஸி ரூ.23, புரோபயாட்டிக் லஸ்ஸி ரூ.35; சாக்லேட் லஸ்ஸி மற்றும் மாம்பழ லஸ்ஸி தலா ரூ.30 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 200 மில்லி மில்க் ஷேக் அனைத்து வகைகளும் ரூ.35 என பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுதவிர, 200 கிராம் பட்டர் முறுக்கு ரூ.95, 200 கிராம் ஆவின் மிக்சர் ரூ.110, 100 கிராம் மில்க் பேடா ரூ.60, 250 கிராம் மில்க் பேடா ரூ.140 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குக்கீஸ் வகைகளில் பட்டர், கஸ்டர்டு, தேங்காய், சாக்லேட் சிப்ஸ், உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காத ஓட்ஸ் குக்கீஸ் ஆகியவற்றின் 80 கிராம் பாக்கெட் தலா ரூ.40 என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி வீடுகளில் இனிப்புகள் தயாரிப்பதற்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்குவதற்கும் நெய், வெண்ணெய், பால் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இனிப்புக் கடைகள் மற்றும் சிறு உணவுத் தயாரிப்பு நிறுவனங்களிலும் இப்பொருட்களின் தேவை அதிகரிப்பது வழக்கம்.
இத்தகைய சூழலில் ஆவின் பால் உபபொருட்களின் விற்பனை விலைகள் திருத்தப்பட்டிருப்பது பண்டிகைக் காலச் செலவுகள் குறித்து பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதிய விலைப் பட்டியல் நாளை முதல் நடைமுறைக்கு வருவதால், அன்றுமுதல் திருத்தப்பட்ட விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படும். மூலப்பொருட்கள் மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரித்துள்ளதால் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் குடும்பங்களின் செலவுச் சுமை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே விலைவாசி விவகாரத்தில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, பண்டிகைக் காலத்தில் ஆவின் பொருட்களின் இந்த திடீர் விலை உயர்வு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கை :
தற்போதைய சந்தைச் சூழலில், தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனங்களின் ஒத்த வகைப் பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலை உயர்விற்குப் பின்னரும், பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருட்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் உபபொருட்களின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த நடவடிக்கை எவ்வித லாப நோக்கம் இன்றி, உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்வதற்கும், சந்தையில் ஆவின் பொருட்களின் போட்டித்தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும், பால் உப பொருட்களின் குறைந்த அளவு விலை திருத்தம் அவசியமானதாகும். இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...