ஏடிஎம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு
- September 26, 2019
- jananesan
- : 858
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை (20-09-19) தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின், தென் சென்னை மாவட்ட தலைவரான செந்தில் குமார் இரவு 10 மணி அளவில் மவுண்ட் ரோடு ரிச்சி ஸ்ட்ரீட் அருகே உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் -ல் பணம் எடுக்க சென்றபோது, தனக்கு முன் வேறு ஒரு நபர் பணம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால் பணம் வராத காரணத்தால் அந்த நபர் ஏடிஎம் மையத்தை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது செந்தில் குமார் தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க அதே ஏடிஎம் மையத்திற்கு சென்று உள்ளார் அவர் தனது கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்த போது தான் கொடுத்ததைவிட ரூபாய் 10ஆயிரம் அதிகமாக பணம் வந்துள்ளது. இதனை அடுத்து இந்த பணம் தன்னுடையது அல்ல என்று அறிந்து, தனக்கு முன்னால் பணம் எடுக்க முயன்றவரை தேடிச் சென்று பணத்தை ஒப்படைக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த நபர் கிடைக்காததால் ஏடிஎம் மையத்திற்கு அருகிலிருக்கும் கடைக்காரர் மற்றும் ரோந்து பணியில் இருந்த காவலரிடம் தனது தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (23-09-19) அன்று எஸ்பிஐ வங்கிக்கு சென்று அவரைப் பற்றி தகவல்கள் அறிய முயற்சித்துள்ளார். இதனை அடுத்து ஏடிஎம் துறை தலைமை அலுவலகம் சென்று அதிகாரிகள் உதவியுடன் அந்த நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வங்கிக்கு அழைத்துள்ளார். பின்னர் இரவு 8 மணி அளவில் பணத்தை உரியவரிடம் சேர்த்துள்ளார். பணத்தை இழந்த நபரோ எப்படி பணத்தை திரும்பப் பெறப் போகிறோமோ என்று எண்ணிக் கொண்டு இருந்த நிலையில் அவர் முயற்சிப்பதற்கு முன் தாமாகவே அவரை கண்டறிந்து பணத்தை கொண்டுவந்து கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.