உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த, பயன்பாட்டுக் கட்டணம் ரத்து

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த, பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய கப்பல் அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு நீர்வழிக்கான பயன்பாட்டுக் கட்டணங்களை ரத்து செய்வதென மத்திய கப்பல் அமைச்சகம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், சிக்கனமான போக்குவரத்து முறையுமாகும். பயன்பாட்டுக் கட்டணங்கள், துவக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய கப்பல் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா, மொத்த சரக்குப் போக்குவரத்தில் நீர்வழிப் போக்குவரத்தின் பங்கு, தற்போது, இரண்டு விழுக்காடு மட்டுமே என்று தெரிவித்துள்ளார். நீர்வழிப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் தொழில்துறையானது, தேசிய நீர்வழிகளை தமது சரக்குப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் மற்ற போக்குவரத்து முறைகளின் சுமை குறைக்கப்படும் என்றும், எளிதான வர்த்தகத்தை இது மேம்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார். மத்திய கப்பல் அமைச்சகத்தின் இந்த முடிவால், 2019-20-ல் 72 எம்எம்டியாக இருந்த உள்நாட்டு நீர்வழி சரக்குப் போக்குவரத்து, 2022-23-ல் 110 எம்எம்டியாக அதிகரிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நடவடிக்கைகளுக்கும், பிராந்திய வளர்ச்சிக்கும் பயனளிக்கும்.
Leave your comments here...