மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் “மனோதர்பன் திட்டம்” துவக்கம் – மத்திய அரசு

இந்தியா

மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் “மனோதர்பன் திட்டம்” துவக்கம் – மத்திய அரசு

மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் “மனோதர்பன் திட்டம்” துவக்கம் – மத்திய அரசு

மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் மனோதர்பன் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் துவக்கி வைத்தார்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியான மனோதர்பன் திட்டத்தை அத்துறையின் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று புதுதில்லியில் துவக்கி வைத்தார். இது மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் திட்டமாகும். இந்த நிகழ்ச்சியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சர் திரு.சஞ்சய் டோட்ரேவும் கலந்து கொண்டார்.


மனோதர்பன் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய அளவிலான டோல்-ஃப்ரீ இலவச தொலைபேசி மைய உதவி எண்ணையும் (8448440632), மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் போர்டலில் உருவாக்கப்பட்டுள்ள மனோதர்பன் சிறப்பு இணையதளப் பக்கத்தையும் துவக்கி வைத்த பொக்ரியால் நிஷாங்க், இத்திட்டம் தொடர்பான கையேட்டையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்:-


கொவிட்-19 பெருந்தொற்று உலகளவில் ஒவ்வொருவருக்கும் சவாலான காலகட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இது தீவிரமான மருத்துவப் பிரச்சனையை மட்டுமல்ல, அனைவருக்கும் கலவையான உணர்வுகளையும், மனரீதியான-சமூக அழுத்தத்தையும் உண்டாக்கி உள்ளது என்றும் தெரிவித்தார். குறிப்பாக, குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் மன நலப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் அதிக அளவிலான மன அழுத்தம், மனப்பதட்டம் மற்றும் பயத்திற்கு ஆட்படுவதாகவும், நடத்தை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதை உணர்ந்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், தொடர் கல்வியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் மாணவர்களின் மன நலத்திற்கும் சமமான அளவு முக்கியத்துவம் அளிப்பதன் அவசியத்தைக் கருதி மனோதர்பன் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று திரு.பொக்ரியால் கூறினார்.

கல்வி, மனநலம் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் ஆகிய துறைகளில் உள்ள வல்லுனர்களை உறுப்பினர்களாக கொண்டு செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மாணவர்களுக்கான மனநல உதவி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் என்றும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மனநல ஆலோசனை, இணையதள உதவி மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள் ஆகியவை கொவிட்-19 முடக்க நிலை காலத்தில் மட்டுமின்றி அதற்கு பிறகும் செயல்படுத்தப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில், மனோதர்பன் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மனோதர்பன் இணையதளத்திற்கு செல்ல இந்த இணைப்பை சொடுக்கவும் : http://manodarpan.mhrd.gov.in/ இந்தப் பக்கத்தில், அனுபவமிக்க ஆலோசகர்களின் வழிகாட்டுதல்கள், பதாகைகள், ஒலி-ஔி ஆலோசனைத் தொகுப்புகள் உள்ளிட்ட மனநலம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.மனநல ஆலோசனைக்காக, தேசிய டோல்-ஃப்ரீ உதவி மைய தொலைபேசி எண். 8448440632 அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால், அனுபவமிக்க மனநல நிபுணர்கள், மருத்துவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

Leave your comments here...