நெல்லையில் வீரவநல்லூர் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
- September 21, 2019
- : 1154

இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் தமிழகத்திலும், கேரளாவிலும் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினர். அங்கு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சிலருடன் தொடர்பு இருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அண்மையில் தமிழகத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து கோவையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையின் போது கிடைத்த தகவலின் படி, நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளங்குளி பகுதியில் உள்ள திவான் முஜிபூர் என்பவரது வீட்டிலும், தென்காசி அருகே புளியங்குடியில் உள்ள மைதீன் என்பவரது வீட்டிலும், வண்ணப் பூச்சுக் கடையிலும் காலை 7 மணி முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை காரணமாக அந்தப் பகுதிகளில் அதிக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மைதீன், திவான் முஜீபுர் இருவரும் உறவினர்கள் ஆவர்.துபாயில் பணிபுரிந்து வந்த திவான் முஜிபூர், அண்மையில் சொந்த ஊர் திரும்பி மைதீனின் வண்ணப் பூச்சு கடையில் வேலை பார்ப்பதாகக் கூறப்படுகிறது. திவான் முஜிபூரின் பாஸ்போர்ட், அவர் வேலை செய்த அலுவலகம் தொடர்பான ஆவணங்களை, அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.