பிரதமர் பாராட்டிய மதுரை மாணவியை அமைச்சர் உதயகுமார் சால்வை அணிவித்து பாராட்டினார்
- June 4, 2020
- g-pandian
- : 1303

மதுரை மேலமடையைச் சேர்ந்தவர் மோகன். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இவர் இருக்கும் பகுதியில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகுந்த சிரமங்களைச் சந்தித்துள்ளனர்.தினமும் மூன்று வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்த மக்களுக்கு உதவி செய்ய மோகன் முன்வந்தார்.
அதற்காக தனது மகளின் மேற்படிப்பிற்காக சேர்ந்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழை மக்களின் உதவிக்காக செலவு செய்தார். அந்தப் பணத்தில் அப்பகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் தொகுப்பை வழங்கினார். சிறு தொழில் நடத்தி தனது மகளுக்காக சிறுகச் சிறுக சேர்ந்து வைத்த பணத்தை ஏழை மக்களுக்காக உதவிய மோகனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மேலும் பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மான்கிபாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார்.அதன்படி பிரதமர் மோடி, 31ம் தேதி நிகழ்ச்சியில் பேசும் போது, “கொரோனா காலத்தில் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் என அனைவரும் சேவையாற்றி வருகின்றனர். அவர்களை போல எண்ணற்ற மக்களும், பிறருக்கான சேவையில் தங்களை அர்ப்பணித்து உள்ளனர். அதற்கு உதாரணம் தமிழகத்தை சேர்ந்த சி.மோகன். இவர் மதுரையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகள் படிப்புக்காக ரூ.5 லட்சம் சேமித்து வைத்திருந்தார். அந்த சேமிப்பு பணத்தை அவர் ஏழைகளுக்கு வழங்கி உள்ளார்” என்று பாராட்டினார். பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மோகன், மதுரை மேலமடையில் சலூன் கடை வைத்திருக்கிறார். பிரதமரின் பாராட்டை தொடர்ந்து மோகனுக்கு மேலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் பாராட்டிய மாணவியை அமைச்சர் உதயகுமார் சால்வை அணிவித்து பாராட்டினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 5 லட்சத்தில் நல திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி பிரதமர் அவர்களால் பாராட்டு பெற்ற மாணவியை வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் சால்வை அணிவித்து பாராட்டினார்
Leave your comments here...