டாஸ்மாக்கை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் -நடிகர் ரஜினிகாந்த் அதிரடி
- May 10, 2020
- g-pandian
- : 1108
- RajiniKanth

டாஸ்மாக் கடையை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்தன. தமிழகத்திலும் மூன்று நாட்கள் கடந்து மே 7-ம் தேதி அன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன.மதுக்கடைகள் திறக்கப்பட்டால் சமூக விலகல் கேள்விக்குறியாகும், கொரோனா தொற்று பரவும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுக்கடைகள் திறக்கும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளித்தது. மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் தனி நபர் இடைவெளி, ஆதார் கார்டு, ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.நிபந்தனை மீறப்பட்டால் தடை செய்ய நேரிடும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களில் பண்டிகைக் காலம் போல் மதுப்பிரியர்கள் அடித்துப் பிடித்து முண்டியடித்து ரூ.294.5 கோடிக்கு மதுவகைகளை வாங்கினர். குற்றச்சமபவங்கள் ஒரே நாளில் அதிகரித்தன.
சமூக விலகலின்றி கும்பல் கும்பலாகக் கூடி மதுபானங்களை வாங்கினர்.இதுகுறித்த பொதுநல வழக்கை சிலர் தாக்கல் செய்தனர். அதில் வழக்கை விசாரித்த வினீத் கோத்தாரி அமர்வு, மே 17-ம் தேதி வரை மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதித்தும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படியும் உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வந்தது.
இந்நிலையில் டாஸ்மாக் கடையை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும், தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
Leave your comments here...