‘தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரஸ் ; கழுவி ஊத்திய நாராயணன் திருப்பதி

இந்தியா

‘தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரஸ் ; கழுவி ஊத்திய நாராயணன் திருப்பதி

‘தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத  காங்கிரஸ் ; கழுவி ஊத்திய நாராயணன் திருப்பதி

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என இன்று காலை முதல் செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயண் திருப்பதி கூறுகையில்:- தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் 68, 607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் அனைத்தும் குய்யோ முறையோ என்று கதறி கொண்டிருக்கின்றன. ஐயோ! மோடி அரசின் பெருநிறுவனங்களுக்கு ஆதரவான நிலையை பாரீர் என்று ராகுல் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


வங்கி பயன்பாட்டு மொழியில் ‘write off’ என்றால் தள்ளுபடி என்று அர்த்தமல்ல. ‘தள்ளி வைப்பு’ என்று அர்த்தம். ஆனால், வேண்டுமென்றே மக்கள் மத்தியில் தவறான கருத்தை கொண்டு சேர்ப்பது அரசியல் அநாகரீகம். ‘தள்ளிவைப்பு’ என்பது கடன் வழங்கப்பட்ட வங்கிகளின் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படுகிறது. வாராக்கடன்களாக அவை இருக்கையில் சொத்துக்களாக பிரதிபலிப்பதால் வங்கிகளின் இருப்பு நிலை பலமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்குகின்றன. அதிலிருந்து நீக்குவதன் மூலம் வரி சலுகைகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க செய்ய வழி செய்கிறது.

சொத்துக்கள் அதிகம் இருப்பதாக இருப்பு நிலை தெரிவிப்பதால், ஆவணப்படி பணம் இருந்தும் மக்களுக்கு மேலும் கடன் வழங்க முடியாத நிலையை உருவாக்குகிற காரணத்தினால் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படுகின்றன. சட்டரீதியாக வாராக்கடன்களை வசூலிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்படும். மேலும், தள்ளிவைப்பு நடவடிக்கையின் மூலம் கடனாளியின் கடன் அடைக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமாகாது. கடனாளிகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் வேகமாக தொடரும். வசூலிக்கப்பட்டவுடன், அவை வங்கிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பு நிலையில் லாபமாக கருதப்படும்.

அதாவது ஒரு வங்கியின் இருப்புநிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட விகிதத்தில் கடன் கொடுக்கவேண்டும். ஆனால் பலவங்கிகள் அவ்வாறு செயல்படுவதில்லை. ஏனெனில் பல கோடிகள் வாராக்கடன்களாக இருந்து வந்தன என்பதே காரணம். ஆகையால், நான்கு வருடங்களுக்கு மேலும் அவை வராக்கடன்களாக இருந்தால் அதை இருப்பு நிலையிலிருந்து ‘தள்ளி வைத்து’ சொத்துக்களை குறைத்துக்கொள்வதன் மூலம் வரி சேமிக்கப்படுவதோடு, மேலும் மூலதனத்தை கொண்டு வந்து மக்களுக்கு கடன் வழங்க முடிகிறது. இதற்கிடையில் தள்ளிவைக்கப்பட்ட கடன்களை சட்டரீதியாக வசூலிக்கும் நடவடிக்கை தொடரும். வசூலிக்கப்பட்டவுடன் வங்கியின் கணக்கில் லாபமாக சேர்க்கப்படும்.

டிசம்பர் 3,2019 அன்றே, காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் மாநிலங்களவையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.ரூபாய் 80,893 கோடி ரூபாய் பொது மற்றும் தனியார் வங்கிகளால் ‘தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ (Writeoff) என்றும் அந்த பட்டியலை வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், அவை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுளார். அது கடனாளிகளுக்கு பயனளிக்காது என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

‘தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரஸ் மற்றும் இதர எதிர் கட்சிகளை மக்கள் தள்ளுபடி செய்து தள்ளிவைப்பது நலம் என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Leave your comments here...