காஷ்மீரில் பாதுகாப்பு வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டம் – 2 புதிய பயங்கரவாத குழுக்களை உருவாக்கியது..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் சேர்ந்து 2 புதிய பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு உருவாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுநாள் வரையிலும், ஐ.எஸ்.ஐ., அமைப்பு, உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து, காஷ்மீரில் வன்முறையை துாண்டி வந்தது.தற்போது, காஷ்மீரிலேயே இரண்டு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.கடந்த ஆண்டு, ஆக., 5ல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஐ.எஸ்.ஐ., அமைப்பு, காஷ்மீரில், டி.எம்.ஐ., எனப்படும், ‘தெஹ்ரிக் – இ – மிலட் – இ – இஸ்லாமி’ மற்றும் டி.ஆர்.எப்., என்ற இரு அமைப்புகளை உருவாக்கியுள்ளது.தடை செய்யப்பட்ட, லஷ்கர் – இ – தொய்பாவின் அங்கமாக கருதப்படும், டி.எம்.ஐ., அமைப்பின் தளபதியாக, நயீம் பிர்தோஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ‘வாட்ஸ் ஆப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம், ‘வீடியோ’ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘காஷ்மீரில் உள்ள அனைத்து பிரிவினைவாத இயங்கங்களும் ஒன்று சேர்ந்து, இந்தியாவை எதிர்க்க வேண்டும்’ என, அழைப்பு விடுத்துள்ளார்.இதேபோல, டி.ஆர்.எப்., அமைப்பின் தளபதி, அபு அனாஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘இந்தியாவுக்கு எதிரான போரில், அனைத்து முஸ்லிம்களும் ஒன்று திரள வேண்டும்’ என, கேட்டுக் கொண்டு உள்ளார்.
அத்துடன், காஷ்மீர் முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா, இந்தியா பக்கம் சாயாமல், காஷ்மீரிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும், காஷ்மீர் மக்கள், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தால், கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த வீடியோ பதிவுகள், காஷ்மீரில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஷ்மீரில், பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதிகளில், பாக்., ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த, 12 நாட்களாக, பீரங்கி குண்டுகளை வீசி வருகிறது. நேற்று, கஸ்பா, கிர்னி பகுதிகளில், மக்கள் வசிக்கும் பகுதிகளில், சிறிய குண்டுகள் வீசப்பட்டன. இதில் பாதிப்பு ஏதும் இல்லை. பாக்., தாக்குதலுக்கு, இந்திய ராணுவத்தினர், தகுந்த பதிலடி தந்ததாக, ராணுவ செய்தி தொடர்பாளர், லெப்டினன்ட் கர்னல், தேவேந்தர் ஆனந்த் தெரிவித்துள்ளார்
Leave your comments here...