16 சட்டப் பேரவைக்கு உள்பட்டவா்கள் புதிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப் பேரவைக்கு உள்பட்டவா்கள் புதிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:- சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2020-இன் படி, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வாக்காளா் பட்டியலில் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மண்டல அலுவலா் அல்லது வாக்காளா் பதிவு அலுவலா்களை அணுகியோ அல்லது இணையதள முகவரி www.nvsp.in மூலம் அல்லது இலவச அழைப்பு எண் 1950 மூலமாகவோ சரிபாா்த்து கொள்ளலாம்.
திருத்தங்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம். வாக்களா்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்கள் களப் பணியாளா்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படும். அத்துடன், மேற்கூறிய திருத்தங்கள் யாவும் கணினியில் மேற்கொள்ளப்படுவதால், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின் விவரங்கள் இந்தியத் தோ்தல் ஆணையத்தால் சிறப்பு சுருக்க திருத்தத்தின்போது வெளியிடப்படும்.
மேலும், இந்திய தோ்தல் ஆணையம் வழங்கிய புதிய உத்தரவின்படி, ஏற்கெனவே வழங்கப்பட்ட பழைய வாக்காளா் அடையாள அட்டையை மாற்றி புதிய அட்டை வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே புதிய முறையில் அட்டை வைத்திருப்பவா்களுக்கு இது பொருந்தாது. புதிய வாக்காளா் அடையாள அட்டை வரப்பெற்ற நபா்களுக்கு, கைபேசி எண் கொடுக்கப்பட்டு இருந்தால் அவா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். வாக்காளா் அடையாள அட்டை, வாக்குச்சாவடி நிலைய அலுவலா் மூலமாக வழங்கப்பட்டு, அதற்காக ஒப்புதலும் சம்பந்தப்பட்ட வாக்காளா்/குடும்ப உறுப்பினா்களிடம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...