50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது..!

Scroll Down To Discover

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 56 வயதான பள்ளி முதல்வர், மாணவிகளை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் செய்முறை தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவேன் என மாணவிகளை மிரட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதோடு, இதுபற்றி வெளியே கூறினாலும் உங்களை பெயிலாக்கி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்து போய் நடந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.

இதனையும் தனக்கு சாதகமாக்கி கொண்ட பள்ளி முதல்வர் ஏராளமான மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சிலர் இதுபற்றி தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்திற்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநில மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது.

பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரை செய்ததது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி முதல்வரின் பாலியல் தொல்லைகள் அம்பலமானது.பின்னர் போலீசார் பள்ளி முதல்வர் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி கூறியதாவது:- 60 மாணவிகளிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது. இதில் 50 மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 மாணவிகள் பள்ளி முதல்வரின் தவறான நடத்தை பற்றி எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.