இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே’ – நேதாஜி பிறந்தநாளில் தமிழக முதல்வர் புகழாரம்..!

தமிழகம்

இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே’ – நேதாஜி பிறந்தநாளில் தமிழக முதல்வர் புகழாரம்..!

இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே’ – நேதாஜி பிறந்தநாளில் தமிழக முதல்வர் புகழாரம்..!

நேதாஜியின் 123-வது பிறந்தநாளையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் 6 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்துள்ளார். நேதாஜி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்:- இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி போர் மட்டுமே’ என தீர்மானித்து, இந்திய தேசிய ராணுவத்திற்கு புத்துயிர் அளித்து, ஆங்கிலேயரை எதிர்த்து, நாட்டின் விடுதலைக்காக ராணுவ ரீதியாக போராடிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் பிறந்த அதே வங்க மண்ணில், 1897-ஆம் ஆண்டு இதே நாளில், திரு.ஜானகிநாத் போஸுக்கும், திருமதி.பிரபாவதி தேவிக்கும் மகனாகப் பிறந்து, பிற்காலத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தின் தன்னிகரற்ற தலைவராக விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவர் தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919ஆம் ஆண்டு ஐ.சி.எஸ். தேர்வுக்கு படிக்க லண்டன் சென்றார். இந்தத் தேர்வில் இந்தியாவிலேயே நான்காம் இடம் பெற்றார்.

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு கிடைத்த பெரும் பதவி – அரசு உத்தியோகம் ஆகியவை எல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. மாறாக, ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறையின் காரணமாக, தனது ராஜினாமா கடிதத்தை மாண்டேகு பிரபுவிடம் அளித்தார். மதிப்பு மிக்க பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளிய அவரைப் பார்த்து, “உன் பெற்றோர் வருத்தப்பட மாட்டார்களா?” என்று மாண்டேகு பிரபு கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத் தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது” என்று சொல்லி அவருக்கு அதிர்ச்சி அளித்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது எங்கும் போர் விமானங்கள் குண்டுகள் வீசிக் கொண்டிருந்த நேரத்தில், எதற்கும் அஞ்சாமல், ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கி கப்பல் வழியாக மூன்று மாதம் பயணம் செய்து ஜப்பானை அடைந்து, பின் சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கு திரு. ராஷ் பிஹாரி தாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு புது ரத்தம் பாய்ச்சி, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தனது சிறிய பேச்சால் ஒவ்வொரு இளைஞனையும்
போரில் பங்கு பெறச் செய்தார்.

இந்திய விடுதலை பெற்றால் தான், ஆசியாவில் உள்ள மற்ற நாடுகள் விரைவில் விடுதலை அடைய முடியும் என்று அறைகூவல் விடுத்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் பர்மாவில் இருந்த தமிழின மக்கள் ஆயிரக்கணக்கில் இந்திய தேசிய ராணுவத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இணைந்தனர். இவர்களில் பலர் இந்திய தேசிய ராணுவத்தின் உயர் பதவிகளிலும் இருந்தனர்.

நேதாஜி அவர்களின் போராட்டத்திற்கு தமிழர்கள் பல வழிகளில் உதவி
புரிந்துள்ளனர். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து பசும்பொன் தேவர் திருமகனாரால் சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர். அவரது இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப் பிரிவுக்கு ராணி
ஜான்சி என பெயரிட்டிருந்தார். அதன் தலைவியாக வீரத் தமிழ்ப் பெண்ணான கேப்டன் லட்சுமி இருந்தார். இந்தப் படையில் கேப்டன் ஜானகி தேவர் என்ற தமிழ்ப் பெண்மணியும் பெரும் பங்காற்றினார். பெரிய வியாபாரியான திரு. நாயுடு என்பவர், நேதாஜியின் விருப்பத்திற்கேற்ப, போரின்போது ஜெர்மனியில் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தினார். நேதாஜியின் சமையல்காரர், தமிழரான திரு.காளி, நேதாஜி சிங்கப்பூர் வந்தபோது அவரை வரவேற்றவர், திரு. சிதம்பரம் என்ற தமிழர்.

மேலும், மலேசியாவில் நேதாஜி க்கு ஆதரவாக “யுவ பாரதம்”, “சுதந்திர
இந்துஸ்தான்” போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன. நேதாஜி அவர்களின் தாரக மந்திரம் “ஜெய்ஹிந்த்” அதாவது வெல்க பாரதம். அதை நேதாஜிக்கு
அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற வீரத் தமிழர். இந்தியாவின் விடுதலைக்காக நேதாஜி அவர்கள் நடத்திய இந்திய தேசிய ராணுவம் மற்றும் காந்தி அவர்கள் நடத்திய பல்வேறு சுதந்திர போராட்டங்களில் தமிழர்களின் பங்கு மிகவும் மகத்தானது என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.

அனைத்துத் துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் நமது நாடு
முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல, நேதாஜி அவர்களின் பிறந்த நாளான இன்று நாம் அனைவரும் உறுதி மேற்கொள்வோம். நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த நேதாஜி அவர்களைப் போன்று, தன்னலம் கருதாது பொது நலனுக்காக தங்களை அர்ப்பணிக்க
வேண்டும் என்று இன்றைய இளைய சமுதாயத்தினரை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.!!

Leave your comments here...