இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-30 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

இந்தியா

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-30 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-30 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!

இந்தியாவின் அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-30, பிரெஞ்ச் கயானாவில் உள்ள விண்வெளித் தளத்திலிருந்து இன்று (17.01.2020) அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்திலிருந்து  ஏரியான் 5 விஏ-251 செலுத்து வாகனம் மூலம், இந்திய நேரப்படி அதிகாலை 2.35 மணிக்கு இந்தியாவின் ஜிசாட்-30 மற்றும் யுடெல்சாட்டுக்கான யுடெல்சாட் கனெக்ட் என்ற செயற்கைக்கோளும் திட்டமிட்டபடி செலுத்தப்பட்டன.

ராக்கெட் புறப்பட்டுச் சென்ற 38 நிமிடம் 25 விநாடிகளில், ஜிசாட்-30 செயற்கைக்கோள் ஏரியான் 5 ராக்கெட்டிலிருந்து, நீள்வட்ட புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதையில் பிரிந்து சென்றது. 3357 கிலோ எடை கொண்ட ஜிசாட்-30, சில உள் சுற்றுவட்டப்பாதை செயற்கைக்கோள்களுக்கு தொடர் செயல்பாட்டை வழங்க உதவும். இஸ்ரோவின் முந்தைய செயற்கைக்கோள்களான இன்சாட்/ஜிசாட் செயற்கைக்கோள் வரிசைகளின் தொடர்ச்சியாகவும் ஏற்கனவே சுற்றி வரும் இன்சாட் 4ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாகவும் ஜிசாட்-30 வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

“ஜிசாட்-30, அதிர்வெண் பிரிவுகள் மற்றும் நெகிழ்வான பாதுகாப்பை வழங்கும் பிரத்யேக கட்டமைப்பைக் கொண்டதாகும். இந்தியாவின் நிலப்பரப்புகள் மற்றும் தீவுகளுக்கு க்யூ-பேண்ட் மூலம் தொலைத் தொடர்பு சேவைகளை இந்த செயற்கைக்கோள் வழங்குவதுடன், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் சி-பேண்ட் மூலம் சேவைகளை வழங்கும்” என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

“ஜிசாட்-30 செயற்கைக்கோள், டிடிஎச் தொலைக்காட்சி சேவைகளை வழங்குவதுடன், விசாட் மற்றும் ஏடிஎம், பங்குச்சந்தை, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டெலிபோர்ட் சேவைகள், டிஜிட்டல் தொலைக்காட்சி செய்தி சேகரிப்பு (DSNG) மற்றும் மின்னணு ஆளுகை செயல்பாடுகளுக்கான இணைப்பை வழங்கும் என்றும் டாக்டர் சிவன் தெரிவித்தார். புதிய வகை தொலைத் தொடர்பு பயன்பாடுகளுக்கான அதிக அளவிலான புள்ளிவிவர மாற்றத்திற்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.

ஜிசாட்-30 செயற்கைக்கோள் அதனை சுமந்து சென்ற ராக்கெட்டிலிருந்து பிரிந்து சென்ற உடனேயே, செயற்கைக்கோளின் கட்டளை மற்றும் கட்டுப்பாடு, கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள இஸ்ரோவின் முக்கிய கட்டுப்பாட்டு அமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த செயற்கைக்கோள் தற்போது நல்ல நிலையில் செயல்படுவது தெரிய வந்துள்ளது.மேலும் வரும் நாட்களில், செயற்கைக்கோளை அதன் புவி சுற்று வட்டப்பாதையில் (பூமத்திய ரேகையிலிருந்து 36,000 கிலோ மீட்டருக்கு மேல்) நிலைநிறுத்துவதற்கான, சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சிகள் அதில் பொருத்தப்பட்டுள்ள உந்துவிசை அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இறுதிக்கட்ட சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் முயற்சியின் போது, 2 சூரிய சக்தி தகடுகளும் ஜிசாட்-30-ன் ஆண்டனா ரிப்ளக்டர்களும் வரிசைப்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, செயற்கைக்கோள் அதன் இறுதிக்கட்ட சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும். உள்சுற்று சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பிறகு இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...