வில்சன் கொலை வழக்கில் ரஃபீக் என்பவர் கேரளாவில் கைது : போலீசார் விசாரணை..!

தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் சோதனை சாவடி உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மார்த்தாண்டம், பருத்திவிளை, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வில்சன் (58) என்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார்.
வில்சன் தனியாக இருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் 2 பேர் சோதனை சாவடியில் இருந்த வில்சனை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் கத்தியாலும் வெட்டியுள்ளார். இதில் வில்சன் மீது குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். சந்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் வில்சனை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வில்சன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வில்சன் கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை சோதனையிட்டனர். அதில் துப்பாக்கி சூடு நடந்த பிறகு 2 பேர் தலையில் தொப்பியுடன் பள்ளிவாசலுக்குள் பதற்றத்துடன் ஓடி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. 2 பேர் கையிலும் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. ஒருவர் பள்ளி வாசலில் நுழைந்ததும் தனது தலையில் இருந்து தொப்பியை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறார். பின்னர் அவர்கள் சாலையில் சாதாரணமாக நடந்து செல்வது போன்ற காட்சிகளும் இருந்தன. துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அவர்கள் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. அதனடிப்படையில் தமிழகம் மற்றும் கேரளா போலீசார் இணைந்து தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக ரஃபீக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பூந்துறையில் ரஃபீக் என்பவரை கைது செய்துள்ள கேரள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்.!
Leave your comments here...