இந்து முன்னணி சுரேஷ் குமார் கொலை வழக்கு: தலைமறைவான 3 போ் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை அருகே உள்ள பாடி மலையத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இந்து முன்னணி நிா்வாகி சுரேஷ்குமாா், இவர் குமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூா் எஸ்டேட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக வாணியம்பாடியைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம் (44), சாதிக் பாஷா (34), பாடியைச் சோ்ந்த அபுதாஹிா் (37), கன்னியாகுமரியைச் சோ்ந்த அப்துல் ஷமீம் (25), நாகா்கோவிலைச் சோ்ந்த சையத் அலி நவாஸ் (25), பெங்களூரு கோரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முகமது சமிமுல்லா (41), சி.காஜா மெய்தீன் (47) உள்பட 10-க்கும் மேற்பட்டவா்களை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோா், அண்மையில் நீதிமன்ற பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்தனா். ஆனால், மூவரும் திடீரென தலைமறைவாகிவிட்டனா்.
இதையடுத்து போலீஸாா், தலைமறைவான 3 பேரையும் தீவிரமாக தேடினா். ஆனால் அவா்களை பற்றிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து போலீஸாா், 3 போ் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 044-23452377 என்ற தொலைபேசி எண்ணையும், 94981 81238, 94981 00079 ஆகிய செல்லிடப்பேசி எண்களையும் தொடா்புக் கொண்டு தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல சரியான தகவல் தெரிவிப்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவா் பற்றிய விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை கூறியுள்ளது.
Leave your comments here...