பைக்கில் சென்றவரிடம் லிஃப்ட் கேட்டு ஊசி போட்டு கொன்று தப்பிய மர்ம நபர்..!

இந்தியா

பைக்கில் சென்றவரிடம் லிஃப்ட் கேட்டு ஊசி போட்டு கொன்று தப்பிய மர்ம நபர்..!

பைக்கில் சென்றவரிடம் லிஃப்ட் கேட்டு ஊசி போட்டு கொன்று தப்பிய மர்ம நபர்..!

ஆந்திர மாநிலத்தில் பைக்கில் சென்றவரிடம் லிஃப்ட் கேட்டு ஏறி செல்லும் வழியில், ஊசி போட்டு கொன்று தப்பியவரை ஆந்திர போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம், கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல் (40). இவரது பெண்ணை ஆந்திர மாநிலம், ஜக்கய்ய பேட்டை, வல்லபீ எனும் ஊரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதன்பின் மகளை மாமியார் வீட்டில் விட்டு வர ஜமீலின் மனைவி சென்றுள்ளார். மனைவியை அழைத்து வர நேற்று, ஜமீல் பைக்கில் வல்லபீக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வல்லபீ கிராமத்தின் அருகே, சாலையில் ஒருவர் லிஃப்ட்கேட்டுள்ளார். அதை பார்த்த ஜமீல், பைக்கை நிறுத்தி அவரை பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு மீண்டும் வல்லபீ நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார் ஜமீல். சிறிது நேரத்தில், ‘சுருக்’ கென தனது முதுகில் குத்தியதை போல் உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயன்றார்.

அப்போது, லிஃப்ட் கேட்டு வந்தவர், வாகனத்தை நிறுத்துவ தற்குள், இறங்கி தப்பி ஓடிவிட்டார். லிஃப்ட் கேட்டு வந்தவர் தப்பி ஓடுவதற்கு முன்னதாக ஊசி போட பயன்படுத்திய சிரிஞ்சை சாலை ஓரத்தில் வீசிவிட்டு ஓடியுள்ளார்.அதைப் பார்த்துவிட்ட ஜமீல், தனக்கு யாரோ ஊசி போட்டுள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக செல்போன் மூலம் இந்த தகவலை தனது மனைவிக்கு தெரியப்படுத்தி உள்ளார். அவர் பதறிபோய், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால், அவர் மயக்க நிலையில் இருந்ததால், அந்த வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவி கேட்டுள்ளார் ஜமீல். அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், 108 ஆம்புலன்ஸுக்கு போன் போட்டு வரவழைத்தனர். ஆனால், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஜக்கைய்யா பேட்டை போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று, ஊசி போட்ட சிரிஞ்சை கைப்பற்றி கொலையாளியை தீவிரமாக தேடிவருகின்றனர். முன் விரோதம் காரணமாக இருக்குமா எனும் கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஆதலால், முன்பின் தெரியாத யாருக்கும் வழியில் லிஃப்ட் கொடுக்க வேண்டாமென ஆந்திர போலீஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Leave your comments here...