பஞ்சாப் அரசை போல் பெண்களை பாதுகாக்க இலவச வாகனங்களை மத்திய, மாநில அரசுகள் இயக்க வேண்டும் : வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

பஞ்சாப் அரசை பின்பற்றி பெண்களை பாதுகாக்க இலவச வாகனங்களை மத்திய, மாநில அரசுகள் இயக்க வேண்டிமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்:-சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு குற்றம் இழைத்தோருக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு பின்பே பெண்களுக்கு கல்வி, சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று கூறிய இந்தச் சமூகத்தின் பலகட்ட எதிர்ப்புகளை மீறி பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஆட்சிப்பணி, ராணுவம், அரசியல் என பல துறைகளில் உயர் பதவிகளில் பெண்கள் இடம்பெற்று வருகின்றனர்.
ஆணுக்கு நிகராக பலதுறைகளில் வல்லுனர்களாக பெண்கள் உருவெடுத்து வரும் இந்த நவீன யுகத்தில், பெண்களின் மீதான ஆணாதிக்கம் மாறியபாடில்லை. ஒரு சில இடங்களில் அவர்களின் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியுள்ளது. சில பெண்களுக்கு அந்த வாய்ப்பு கூட கிட்டுவதில்லை. பெண்ணடிமைத் தனம் ஒழிந்துவிட்டதா? என்று கேட்டால் 100% இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.
இந்த தடைகளை மீறி பெண்கள் முன்னேற்றம் கண்டு வரும் அதே நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரிக்கின்றன. அவர்களது உயிருக்கு மேலாக கருதும் கற்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் என்கிறது ஐ.நா. புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது.
மேலும் குற்ற வழக்குகளின் விசாரணை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என சட்டங்கள் முன்மொழிந்த போதிலும், நடவடிக்கைகள் மெதுவாகவே ஊர்ந்தே செல்கின்றன. பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க பல்வேறு சட்டங்களை கொண்டு வந்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டாலும், பெண்களுக்கு எதிரான குற்ற செயல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
தற்போது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வேளைக்கு செல்லும் பெண்களை பத்திரமாக வீட்டில் இறக்கி விட இலவச காவல்துறை வாகனங்கள் இயக்கப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்திர சிங் அறிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் அதே வேளையில், தமிழக அரசு மட்டுமின்றி மத்திய அரசும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இலவச வாகனங்களை காவல்துறை பாதுகாப்புடன் இயக்கி, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்..
Leave your comments here...